சி.பி.எஸ்.இ மாணவர்களுக்கு 12-ம் வகுப்பு தேர்வு ரத்துசெய்ய வாய்ப்பு
இந்தியாவில் கொரோனா பரவல் இரண்டாவது அலை மிக மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா இரண்டாவது அலையின் தாக்கத்தால் இந்திய சுகாதாரக் கட்டமைப்பு மிகமோசமான பாதிப்புகளை எதிர்கொண்டது. கடந்த இரண்டு மாதங்களாக இந்தியாவின் ஒவ்வொரு மாநிலங்களும் கொரோனாவை சமாளிக்க முடியாமல் திணறின. சூறாவளி போல இருந்த கொரோனா பாதிப்பின் வீரியம் தற்போது குறையத் தொடங்கியுள்ளது. நாள் ஒன்றுக்கு 4 லட்சம் பேர் வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டநிலையில், தற்போது இரண்டு லட்சத்துக்கும் குறைவானவர்களே கொரோனாவால் பாதிக்கப்படுகின்றனர். இதற்கிடையில், கொரோனா பாதிப்பு தீவிரமாக இருந்ததன் காரணமாக ஒவ்வொரு மாநிலங்களிலும் 12-ம் வகுப்பு தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டன.
தமிழகத்தைப் பொறுத்தவரை, மாநிலக் கல்வித் திட்டத்தில் படிக்கும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு நிச்சயம் தேர்வு நடத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. அதேபோல, நாடு முழுவதும் சி.பி.எஸ்.பி மாணவர்களுக்கான தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. இதற்கிடையில், 12-ம் வகுப்பு தேர்வு நடத்துவது தொடர்பாக மாநில அரசுகளுடன் மத்திய அரசு பல சுற்று பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது.
இதில், தேர்வு நேரத்தை குறைத்து தேர்வுகள் நடத்துவதற்கு பல மாநிலங்கள் ஆதரவுதெரிவித்தன. தேர்வு நடத்துவதற்கு முன்னர், ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்திவிட்டு பின்னர் தேர்வு நடத்தலாம் என்று சில மாநிலங்கள் ஆலோசனை தெரிவித்துள்ளனர். இதற்கிடையில், தேர்வுகளை ரத்து செய்யவேண்டும் என்று மாணவர்கள் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளனர். அதுதவிர, தேர்வை ரத்து செய்யவேண்டும் என்று ட்விட்டரில் தொடர்ந்து கோரிக்கைவைத்துவருகின்றனர். சி.பி.எஸ்.இ தேர்வுகளை ரத்து செய்யவேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு நாளை விசாரணைக்கு வருகிறது.
இந்தநிலையில், இந்தியப் பள்ளிகள் தேர்வு வாரியம் பெயரிலான மே 27-ம் தேதியிட்ட கடிதம் வெளியாகியுள்ளது. அந்த கடிதத்தில், ‘ஒவ்வொரு மாணவர்களின் 11-ம் வகுப்பு தேர்வு முடிவுகளின் அடிப்படையில் அவர்களுடைய சராசரி மதிப்பெண்களை அளிக்கவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இந்தக் கடிதம் இந்திய பள்ளிகள் தேர்வு வாரியத்தின் அதிகாரப்பூர்வ கடிதமா என்று உறுதிப்படுத்தப்படவில்லை. எனவே, 12-ம் வகுப்பு தேர்வை ரத்து செய்யும் முடிவை மத்திய கல்வி அமைச்சகம் எடுத்துள்ளது என்று தெரிகிறது.