பாபா ராம்தேவை எதிர்த்து கறுப்பு தினம்.. மருத்துவர்கள் சங்கம் அறிவிப்பு!
பாபா ராம்தேவின் சர்ச்சை பேச்சை எதிர்த்து ஜூன் 1ஆம் தேதி கறுப்பு தினம் அனுசரிக்கப்படும் என இந்திய மருத்துவர்கள் சங்க கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
அலோபதி நவீன மருத்துவ முறையை அவமதித்து பேசியதற்காகபாபா ராம்தேவ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென மத்திய அரசிடம் இந்திய மருத்துவ சங்கம் வலியுறுத்தியது. அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில், பாபா ராம்தேவை எதிர்த்து கறுப்பு தினம் அனுசரிக்கப்போவதாக இந்திய மருத்துவர்கள் சங்கக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து இந்திய மருத்துவர்கள் சங்கக் கூட்டமைப்பு (FORDA), “மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ ஊழியர்கள், காவல்துறையினர், ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட கொரோனா வீரர்கள் இந்த கொள்ளை நோய் காலத்தில், சக்திக்கு மீறி உழைத்துள்ளனர்.
சிலர் உயிரைக்கூட தியாகம் செய்துள்ளனர். தேசக் கடமைக்காக உயிரை விட்ட பிறகு எங்களை அவமதிக்கும் வகையில், மனிதத்தன்மையற்ற கருத்துகளை பாபா ராம்தேவ் எனப்படும் ராம் கிஷன் யாதவ் கருத்து தெரிவித்துள்ளார்.
அவரது அருவருக்கத்தக்க கருத்துகளுக்கு எதிராக குரல் கொடுத்த பிறகும் அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. நாங்கள் அனைவரும் கொரோனா தடுப்பு சேவையில் முழுவதுமாக ஈடுபட்டிருக்கிறோம். எனவே, சேவைக்கு பாதிப்பு ஏற்படாமல், ஜூன் 1ஆம் தேதி பணிமனையில் இருந்துகொண்டே கறுப்பு தினத்தை அனுசரிப்போம்.
பாபா ராம்தேவ் தனது கருத்துகளுக்காக நிபந்தனையில்லா பொது மன்னிப்பு கேட்கவேண்டும். தவறினால் அவர் மீது தொற்று நோய்கள் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்” என்று தெரிவித்துள்ளது.