ஈஸ்டர் தாக்குதல் குற்றவாளிகளுக்குத் தண்டனை உறுதி! – வீரசேகர திட்டவட்டம்.
உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதலுடன் தொடர்புபட்ட பிரதான நபர்களுக்கு எதிராக வழக்குத் தொடுக்கப்பட்டுள்ள நிலையில், ஏனைய சந்தேகநபர்கள் சகலருக்கும் எதிராக அடுத்த ஒரு சில வாரங்களில் சட்டமா அதிபரினால் வழக்குத் தொடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது எனப் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“இவ்வாறான திட்டமிடப்பட்ட தாக்குதலுடன் தொடர்புபட்ட நபர்களை கண்டறிவது இலகுவான காரியம் அல்ல. எம்மைப் பொறுத்த வரையில் சகல குற்றவாளிகளையும் தண்டிக்க வேண்டும். ஒரு சிலர் இந்த விசாரணைகளில் இருந்து தப்பிப்பது எதிர்காலத்தில் மீண்டும் சிக்கலாக அமையலாம். எவ்வாறு இருப்பினும் பிரதான குற்றவாளிகள் என 32 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்கள் மீது வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளன.
அடுத்த சில வாரங்களில் உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதலுடன் தொடர்புபட்ட ஏனைய சந்தேகநபர்கள் மீது குற்றச்சாட்டுக்களைப் பதிவு செய்யவுள்ளதாக சட்டமா அதிபர் எம்மிடம் தெரிவித்துள்ளார்.
குறைபாடுகள் உள்ள விசாரணை கோப்புகளில் சுமார் 75 சதவீதம் பூர்த்தி செய்யப்பட்டு சட்டமா அதிபர் அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 25 சதவீத குறைபாடுகளும் பூர்த்தியான பின்னர் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். விரைவில் இந்த நடவடிக்கைகள் பூர்த்தியாகும்.
இதற்கிடையில், வழக்குகளை விரைவுபடுத்துவதற்காக சட்டமா அதிபருடன் இணைந்து பணியாற்றக் குற்றப் புலனாய்வுப் பிரிவு மற்றும் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவைச் சேர்ந்த 54 அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். எவ்வாறு இருப்பினும் இந்த ஆண்டு இறுதிக்குள் உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் குறித்த வழக்குகள் முழுமைப்படுத்தப்படும். குற்றவாளிகளைத் தண்டிக்க சகல நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படும்” – என்றார்.