சுகாதார தொழிற்சங்கமும் வேலை நிறுத்தப் போராட்டத்தில் களமிறங்கத் தீர்மானம்! – அரசுக்கு நாளை வரை கால அவகாசம்
“இலங்கை சுகாதார தொழிற்சங்க ஒன்றியத்தால் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகள் நாளை முதலாம் திகதிக்கு முன்னர் தீர்க்கப்படாவிட்டால் எதிர்வரும் 3ஆம் திகதி முதல் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடுவோம்.”
– இவ்வாறு இலங்கை சுகாதார தொழிற்சங்க ஒன்றியத்தின் பொதுச்செயலாளர் மஹிந்த குருகே தெரிவித்தார்.
14 கோரிக்கைகளை உள்ளடக்கி இந்த வேலைநிறுத்தம் முன்னெடுக்கப்படும் எனவும் அவர் மேலும் கூறினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“கொரோனாத் தொற்றுநோய் தொடர்பான முடிவெடுத்தலில் ஒருங்கிணைந்த தொழிற் சங்க குழுவையும்
இணைத்தல் வெண்டும், வைத்தியசாலைப் பணிக்குழவினருக்கு தடையின்றி போதியளவு சுய பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கவேண்டும், வைத்தியசாலைகளிலுள்ள கொரோனாக் கட்டுப்பாட்டுக்குழுவில் தொழிற்சங்கப் பிரதிநிதிகளையும் இணைத்துக்கொள்ள வேண்டும், பொது நிர்வாக அமைச்சால் வெளியிடப்பட்ட சுற்றுநிருபத்திற்கமைய கர்ப்பிணி சுகாதாரத்துறைசார் பணிக்குழுவினருக்கு விசேட விடுமுறைக்கான சுற்றுநிருபம் வெளியிட வேண்டும், பொது நிர்வாக அமைச்சால் வெளியிடப்பட்ட சுற்றுநிருபத்திற்கமைய சுகாதாரத்துறைசார் பணிக்குழுவினருக்கு விஷேட விடுமுறை வழங்க வேண்டும், அரசு அறிவித்த விசேட விடுமுறை தினத்தில் பணியாற்றிய சுகாதாரப் பணிக்குழுவினருக்கு விடுமுறை தினப்படி வழங்க வேண்டும், பயணத்தடை காலத்தில் சுகாதாரத்துறைசார் பணிக்குழுவினருக்கு இலவச போக்குவரத்து வசதியேற்படுத்திக் கொடுக்க வேண்டும், கொரோனாத் தொற்று காரணமாக தனிமைப்படுத்தப்பட்ட அல்லது சிகிச்சை பெறும் சுகாதாரப் பணிக்குழுவினருக்கு ஒரு முறையான முறைமையை செயற்படுத்தல் வேண்டும், விசேட சிரமங்கள் காணப்படும் பணிக்குழுவினருக்கு அண்மையிலுள்ள வைத்தியசாலைகளில் தற்காலிகமாக கடமையாற்ற அனுமதித்தல் வேண்டும், அனைத்துப் பணிக்குழு வெற்றிடங்களையும் நிரப்புதல் வேண்டும், பணிக்குழுவினரின் மேலதிக நேரக்கொடுப்பனவு, விடுமுறை தினக் கொடுப்பனவுகளில் காணப்படும் கட்டுப்பாடுகளை நீக்க வேண்டும், கொரோனா சிகிச்சை நிலையங்கள், தடுப்பு நிலையங்களில் சேவையாற்றும் பணிக்குழுவினருக்கு உணவு, போக்குவரத்து வசதி மற்றும் அனைத்து வசதிகளும் ஏற்படுத்திக் கொடுத்தல் வேண்டும், ஆபத்தான மற்றும் கடுமையான சேவைகளை வழங்குவதற்கான ஊக்குவிப்புக் கொடுப்பனவு வழங்க வேண்டும், கொரோனாத் தடுப்பூசி ஏற்றாத பணிக்குழுவினருக்கு உடனடியாக ஏற்றுதல் வேண்டும் ஆகிய கோரிக்கைகள் எம்மால் முன்வைக்கப்பட்டுள்ளன.
இவை நாளை முதலாம் திகதிக்கு முன் தீர்க்கப்படாவிட்டால் எதிர்வரும் 03ஆம் திகதி முதல் தொழிற்சங்க நடவடிக்கை
ஆரம்பிக்கப்படும்” – என்றார்.