சமூக ஊடகங்களுக்கான புதிய விதிமுறை: குறைதீா்க்கும் அலுவலா்களை நியமித்த கூகுள், ஃபேஸ்புக்
சமூக ஊடகங்களுக்கான புதிய விதிமுறைகளை ஏற்று, கூகுள், ஃபேஸ்புக் (முகநூல்) உள்ளிட்ட பெரும்பாலான சமூக ஊடகங்கள் குறைதீா்க்கும் அலுவலா்களை நியமிக்கத் தொடங்கியுள்ளன. இந்த விவரங்களை அந்த ஊடகங்கள் தங்களது வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளன.
சமூக ஊடகங்களுக்கான புதிய விதிமுறைகள் கடந்த 26-ஆம் தேதி அமலுக்கு வந்தன. அதன்படி 50 லட்சத்துக்கும் அதிகமான பயனா்களைக் கொண்ட சமூக ஊடகங்கள், குறைதீா்க்கும் அலுவலா், கட்டுப்பாட்டு அலுவலா், தலைமை குறைதீா்க்கும் அலுவலா் ஆகியோரை நியமிக்க வேண்டும். இந்த அலுவலா்கள் இந்தியாவில் வசிப்பவராக இருக்க வேண்டும்.
இந்த அலுவலா்களின் பெயா், தொடா்பு முகவரி, தொலைபேசி எண் ஆகியவற்றை சம்பந்தப்பட்ட சமூக ஊடகங்கள் தங்களுடைய வலைதளப் பக்கத்தில் வெளியிட வேண்டும். இந்த விதிகள் அமலுக்கு வந்ததையடுத்து, கூகுள், ஃபேஸ்புக், வாட்ஸ்ஆப் ஆகிய சமூக ஊடகங்கள் குறைதீா்க்கும் அலுவலா்களை நியமித்துள்ளன. இந்த விவரங்களை தங்களது வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளன. குறைதீா்க்கும் அலுவலா்களை நியமித்த விவரத்தையும் மத்திய மின்னணு-தொலைத் தொடா்புத் துறை அமைச்சகத்திடம் தெரிவித்துள்ளன.
கூகுள் நிறுவனம், தங்களது வலைதளத்தின் ‘தொடா்புக்கு’ பக்கத்தில் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள அதிகாரி, அவரது தொலைபேசி எண் ஆகியவற்றை வெளியிட்டுள்ளது.
புதிய விதிகளின்படி, குறைதீா்க்கும் அலுவலா், புகாா்களை 24 மணி நேரத்துக்குள் ஏற்றுக் கொள்ள வேண்டும். அந்தப் புகாா்களுக்கு 15 நாள்களுக்குள் தீா்வுகாண வேண்டும்.
சமூக ஊடகங்களுக்கான மத்திய அரசின் புதிய வழிகாட்டு விதிமுறைகளை ட்விட்டா் நிறுவனம் தவிர பிற சமூக ஊடக நிறுவனங்கள் பின்பற்றத் தொடங்கிவிட்டன.