தெல்லிப்பளை மூதாட்டி கொலை: பிரதான சந்தேகநபர் நேற்று கைது.

யாழ்., தெல்லிப்பழையில் வீட்டில் தனித்திருந்த மூதாட்டி படுகொலை செய்யப்பட்டு, நகை மற்றும் பணம் கொள்ளையிடப்பட்ட சம்பவத்தில் இரண்டு வருடங்களாகத் தலைமறைவாகியிருந்த பிரதான சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
மானிப்பாய் பகுதியில் வைத்து அவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.
25 வயதுடைய அவர் இரண்டு வருடங்களாகப் புங்குடுதீவில் தலைமறைவாகியிருந்த நிலையில்
மானிப்பாய்க்கு வருகை தந்திருந்த நிலையில் காங்கேசன்துறைப் பொலிஸ் புலனாய்வுப் பிரிவின் பொறுப்பதிகாரி சி.நிதர்சன் தலைமையிலான அணியினர் கைதுசெய்தனர்.
தெல்லிப்பழை, மகாதனையைச் சேர்ந்த சுந்தரலிங்கம் கமலாதேவி (வயது 70) என்ற மூதாட்டி கழுத்து நெரித்துப் படுகொலை செய்யப்பட்ட நிலையில் 2019ஆம் ஆண்டு மே 6ஆம் திகதி சடலமாக மீட்கப்பட்டார்.
மூதாட்டி அணிந்திருந்த நகை மற்றும் வீட்டிலிருந்த பணம் என்பன கொள்ளையிடப்பட்டுள்ளன என்று உறவினர்கள் தெரிவித்திருந்தனர்.
சம்பவத்தையடுத்து 5 பேர் கைது செய்யப்பட்டனர். 6ஆவது சந்தேகநபர் – பிரதான சந்தேகநபர் தலைமறைவாகியிருந்தார்.
இந்தநிலையில், பிரதான சந்தேகநபர் இரண்டு வருடங்களின் பின் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
“மூதாட்டி படுகொலை செய்யப்பட்டபோது நான் அவரது காலைப் பிடித்து வைத்திருந்தேன். என்னை இரண்டு வருடங்கள் தலைமறைவாகியிருக்குமாறு மற்றவர்கள் கூறினர். பொலிஸார் மறந்த பின்னர் வீட்டுக்கு வருமாறும் தெரிவித்திருந்தனர்” என்று சந்தேகநபர் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.