சிறுவர்களுக்கு கருப்பு பூஞ்சை: உடல்நிலை மோசம்… அதிர்ச்சியில் மாநிலம்..!
நாட்டிலேயே முதன்முறையாக கர்நாடகாவில் இரு சிறுவர்கள் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்தியாவில் கொரோனா தாக்கத்துக்கு இடையே கருப்பு பூஞ்சை தொற்று ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இந்த கருப்பு பூஞ்சையால் நாடு முழுக்க 11,700 க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதாக கடந்த 25ம் தேதி மத்திய அரசு தெரிவித்துள்ளது.அதிகபட்சமாக குஜராத்தில் 2,859 பேர் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதுவரை பெரியவர்களை மட்டுமே தாக்கி வந்த கருப்பு பூஞ்சை தொற்று முதன்முறையாக கர்நாடகாவைச் சேர்ந்த இரண்டு சிறுவர்களை பாதித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகாவின் பல்லாரி மாவட்டத்தைச் சேர்ந்த 11 வயது சிறுமியும், சித்ரதுர்கா மாவட்டத்தைச் சேர்ந்த 14 வயது சிறுவனும் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இருவரும் இங்குள்ள அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவர்களின் உடல்நிலை மோசமாக இருப்பதாக கூறப்படுகிறது. ஆரம்பத்தில் கருப்பு பூஞ்சை குறித்து சிறுவர்களின் குடும்பம் அறியவில்லை என்றும் அது தீவிரமான பின்னரே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
மேலும், சிகிச்சை பெற்று வரும் சிறுவர்கள் இரண்டு பேரும் முதலாவதுவகை நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டிருப்பதும் தெரிய வந்துள்ளது. கர்நாடகாவில் இதுவரை கருப்பு பூஞ்சை நோயால் 1,250 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 1,193 பேர் தற்போது சிகிச்சையில் உள்ளனர் என்றும் 18 பேர் குணமடைந்துள்ள நிலையில் 39 பேர் உயிர் இழந்துள்ளதாக மாநில சுகாதாரத்துறை கூறியுள்ளது.