நளினி, முருகன் பரோலுக்கு வேலூர் மாவட்ட காவல்துறை மறுப்பு – காரணம் என்ன?
நளினி, முருகன் ஆகியோர் 30 நாட்கள் பரோல் கேட்டிருந்த நிலையில் அவர்களை விடுவிக்கக் கூடாதென்று, வேலூர் மாவட்ட காவல்துறை ஆட்சேபம் தெரிவித்திருக்கிறது.
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனைப் பெற்று வரும் முருகன் வேலூர் மத்திய ஆண்கள் சிறையிலும், அவரின் மனைவி நளினி வேலூர் பெண்கள் தனிச்சிறையிலும் இருக்கின்றனர். இவ்விருவர் உட்பட வழக்கில் தொடர்புடைய ஏழு பேரையும் விடுதலைச் செய்வது குறித்து தமிழக அரசு பரிசீலனை செய்துவருகிறது. இந்த நிலையில், சென்னையிலுள்ள நளினியின் தாயார் பத்மா (வயது 81) உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.
தாயாரை உடனிருந்து கவனிக்கவும், கடந்தாண்டு மறைந்த முருகனின் தந்தைக்கு சடங்குகள் செய்யவும், தன்னை 30 நாட்கள் பரோலில் விடுவிக்க வேண்டும் எனக்கோரி நளினி தமிழக முதலமைச்சர், தலைமைச் செயலாளர், உள்துறைச் செயலர் ஆகியோருக்குக் கடந்த புதன்கிழமை மனு அனுப்பியிருந்தார். அதேபோல், முருகனும் 30 நாட்கள் பரோல் கேட்டு மனு அனுப்பியிருந்தார்.
இருவரின் மனுக்களும் சிறைத்துறை தலைவர், உள்துறைச் செயலரின் பரிசீலனையில் இருப்பதாக சிறைத்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, பரோல் காலத்தில் நளினி, முருகன் இருவரும் காட்பாடி பிரம்மபுரத்திலுள்ள உறவினர் வீட்டில் தங்க விரும்புவதாக ஒரே முகவரியை அளித்திருந்தனர். அந்த முகவரி, தங்கும் வசதி, பாதுகாப்புச் சூழல் குறித்து ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்திட சிறைத்துறை ஏ.டி.ஜி.பி அலுவலகம் சார்பில் வேலூர் மாவட்ட காவல்துறைக்கு உத்தரவிடப்பட்டிருந்தது.
அதன்பேரில், காட்பாடி டி.எஸ்.பி ரவிச்சந்திரன் தலைமையிலான போலீஸார் அந்தப் பகுதியில் ஆய்வு செய்தனர். இதையடுத்து, நளினி, முருகனுக்குப் பரோல் வழங்குவதற்கு ஆட்சேபம் தெரிவித்து ஏ.டி.ஜி.பி அலுவலகத்துக்கு வேலூர் மாவட்ட காவல்துறை அறிக்கை அனுப்பியிருக்கிறது. அந்த அறிக்கையில், “கொரோனா தொற்று பாதிப்பு தணியாத நிலையில், காவலர்கள் முழு வீச்சில் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இப்படியான சூழலில், நளினி, முருகனுக்குப் பரோல் வழங்க வேண்டாம்’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், நளினி, முருகன் தம்பதி பரோலில் வெளிவருவது, கேள்விக் குறியாகியிருக்கிறது.