உலக சுகாதார ஸ்தாபனத்தினால் அங்கீகரிக்கப்பட்ட தடுப்பு ஊசியே யாழ்ப்பாணத்தில் வழங்கப்படுகின்றது.
உலக சுகாதார ஸ்தாபனத்தினால் அங்கீகரிக்கப்பட்ட தடுப்பு ஊசியே யாழ்ப்பாணத்தில் வழங்கப்படுகின்றது. எனவே பொதுமக்கள் தயக்கமின்றி தடுப்பூசியை பெற்றுக்கொள்ளலாம் என யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் திரு.கணபதிப்பிள்ளை மகேசன் அவர்கள் தெரிவித்துள்ளார்.
யாழ் மாவட்டத்தில் இரண்டாம் நாள் பொதுமக்களுக்கு தடுப்பூசி வழங்கும் செயற்பாடு இடம்பெறுகின்ற நிலையில் யாழ்ப்பாண பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட யாழ். பரியோவான் கல்லூரித் தடுப்பூசி வழங்கும் நிலையத்திற்கு வருகை தந்து தடுப்பூசி வழங்கும் நிலைமைகளை ஆராய்ந்த பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
யாழ்ப்பாண மாவட்டத்தில் தற்பொழுது தடுப்பு ஊசி ஏற்றும் செயற்பாடு ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது. மக்கள் சில இடங்களில் மிகவும் ஆர்வம் காட்டிப் பெற்றுக் கொள்கிறார்கள் எனினும் சில இடங்களில் மக்கள் தடுப்பூசிகளை பெறுவதிலுள்ள ஆர்வம் குறைவாக காணப்படுகின்றது.
இந்த தடுப்பூசியானது உலக சுகாதார நிறுவனத்தினால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு தடுப்பூசியாகும் இலங்கையில் பல இடங்களிலும் இந்த தடுப்பூசி பொதுமக்களுக்கு செலுத்தப்படுகின்றது. எனினும் வடக்கு மாகாணத்தில் யாழ். மாவட்டத்திற்கு மாத்திரமே தடுப்பூசி முதற்கட்டமாக கிடைத்திருக்கின்றது எனவே பொதுமக்கள் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி தடுப்பூசி பெற்றுக் கொள்ள முன்வர வேண்டும்.
அத்தோடு நேற்றைய தினம் இந்த தடுப்பூசி வழங்கும் செயற்பாடு ஆரம்பிக்கப்பட்ட போதிலும் பொதுமக்கள் இந்த தடுப்பூசியை பெறுவதில் தயக்கம் காட்டிய நிலை காணப்படுகின்றது. நேற்றைய எமது இலக்கில் 52 சதவீதமானோருக்கு மாத்திரமே தடுப்பூசி வழங்கக் கூடியதாக இருந்தது. எனினும் எதிர்வரும் மூன்று, நான்கு நாட்களுக்குள் இந்த தடுப்பூசி வழங்கும் செயற்பாடு முடிவுறுத்தப்படவேண்டியுள்ளது.
பொதுமக்கள் அனைவரும் குறிப்பிடப்பட்ட கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் உள்ள மத்திய நிலையங்களுக்கு சென்று தமக்கான தடுப்பூசிகளை தயக்கமின்றி பெற்றுக்கொள்ளமுடியும். ஏதாவது ஒவ்வாமை அல்லது ஒரு நோய் இருந்தால் அதற்குரிய அறிவுறுத்தல் அதற்குரிய நடைமுறை சுகாதாரப் பிரிவினரால் வழங்கப்படும் அவ்வாறு ஏதேனும் ஒவ்வாமை இருந்தால் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அவர்களுக்குரிய தடுப்பூசி வழங்கப்படும். அதற்குரிய அறிவுரைகளை சுகாதாரப் பிரிவினர் வழங்குவார்கள் எனவே பொதுமக்கள் தயக்கமின்றி தமக்குரிய தடுப்பூசி பெற்றுக் கொள்ளலாம்.
மேலும் நாளை 22 புதிய நிலையங்களை பிரதேச செயலர் பிரிவுகளில் ஆரம்பிக்கவுள்ளோம் இந்த தடுப்பூசியை மிக விரைவாக செலுத்துவதற்கு புதிய நிலையங்கள் ஆரம்பிக்கப்படவுள்ளன எனவே பொதுமக்களுக்கு கிராம உத்தியோகத்தர்கள் ஊடாக தங்களுக்குரிய அறிவுறுத்தல் கிடைக்கபெறும்.
எனவே தமக்குரிய அறிவுறுத்தல் கிடைத்தவுடன் தமக்குரிய தடுப்பூசிகளை உடனடியாக பெற்றுக் கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளார்.