முதலீடு மற்றும் கல்வித்துறை மேம்பாட்டுக்கு அவுஸ்திரேலியா உதவி.
முதலீடுகள் மற்றும் கல்வித்துறைகளின் மேம்பாட்டுக்கு அவுஸ்திரேலியாவின் ஒத்துழைப்பு கிடைத்துள்ளது. இலங்கையை தென் ஆசிய வலயத்தின் உயர் கல்வி மையமாக முன்னேற்றுவதற்கான வாய்ப்புகள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
இலங்கைக்கான அவுஸ்திரேலியாவின் உயர்ஸ்தானிகர் டேவிட் ஹோலி (David Holly) இன்று (31) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களை சந்தித்தபோதே இதனை தெரிவித்தார்.
குறுகிய காலப்பகுதியில் இந்நாட்டு கடல் எல்லையில் இரண்டு கப்பல்கள் விபத்துக்குள்ளாகின. இவ்வாறான சந்தர்ப்பங்களின்போது இடம்பெறும் சுற்றாடல் பாதிப்பை மதிப்பிடுவதற்கும் மற்றும் சேதனப் பசளையை அடிப்படையாகக்கொண்ட விவசாயத்திற்காக அரசாங்கம் முன்னெடுத்து வருகின்ற வேலைத்திட்டங்களுக்கும் அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் தொழிநுட்ப ஒத்துழைப்பை எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டார்.
பெறுமதி சேர்க்கப்படும் உற்பத்திகளுக்கு அதிக முதலீட்டு வாய்ப்புக்களை உருவாக்குவதன் மூலம் இந்தியா, மத்திய கிழக்கு உட்பட பல்வேறு நாடுகளை இலக்காகக்கொண்ட ஏற்றுமதி சந்தையை இலங்கையில் உருவாக்கும் இயலுமை பற்றியும் உயர்ஸ்தானிகர் ஜனாதிபதி அவர்களின் கவனத்திற்கு கொண்டு வந்தார்.
அவுஸ்திரேலியாவுக்கும் இலங்கைக்குமிடையிலான 75 வருடகால நட்புறவை நினைவுபடுத்திய டேவிட் ஹோலி அவர்கள், கொவிட் சிகிச்சை நடவடிக்கைகளுக்காக அவுஸ்திரேலிய அரசு வழங்கிய ஒரு தொகை வைத்திய உபகரணங்கள் அடங்கிய விமானமொன்று எதிர்வரும் 03ஆம் திகதி இலங்கைக்கு வர உள்ளதாகவும் குறிப்பிட்டார்.
அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் முதலாவது செயலாளர் ஆமேட்டி பிரட்லி (Armaity Bradley), பாதுகாப்பு ஆலோசகர் கெப்டன் இயன் கெயின் (Ian Cain), ஜனாதிபதியின் செயலாளர் பீ.பி.ஜயசுந்தர, வெளிநாட்டு அமைச்சின் செயலாளர் அட்மிரல் ஜயநாத் கொலம்பகே ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
ஜனாதிபதி ஊடகப் பிரிவு