யாழில் தேவாலயத்துக்குள் திருட்டு முயற்சி! – தடுக்கச் சென்றவருக்கு வாள்வெட்டு.

யாழ். நாவற்குழி அற்புத அன்னை தேவாலயத்தில் திருட்டில் ஈடுபட்டவரை அவதானித்த இளைஞர் தடுக்கச் சென்றபோது வாள் வெட்டுக்கு இலக்காகி யாழ் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் (31) காலை 9 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
இது குறித்து மேலும் தெரியவருவதாவது,
குறித்த தேவாலயத்தினுள் காணப்பட்ட ஒருவரின் நடவடிக்கை வித்தியாசமாக தென்பட்டதால் அதனை அவதானித்த ஒருவர் உள்ளே சென்று அவர் தொடர்பில் கேள்வி எழுப்பியிருக்கின்றார்.
அப்போது அங்கு திருட்டில் ஈடுபட்ட நபர் கையில் வைத்திருந்த வாளால் வெட்டியதில் நியாயம் கேட்கச் சென்றவர் கையில் படுகாயம் அடைந்துள்ளார்.
படுகாயம் அடைந்தவர் கிராமத்து மக்களால் மீட்கப்பட்டு யாழ்.போதனா வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டு அங்கு சேர்க்கப்பட்டுள்ளார்.
திருட்டில் ஈடுபட்டவர் தொடர்பில் தகவல் அறிந்த மக்கள் அவரைப் பிடித்து கடுமையாகத் தாக்கி சாவகச்சேரிப் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
வாள் வெட்டுச் சம்பவத்தில் நாவற்குழி ஐந்து வீட்டுத் திட்டத்தைச் சேர்ந்த சுந்தராஜா கலிஸ்டஸ் என்ற 32 வயதுடையவரே கையில் படுகாயங்களுக்குள்ளான நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சாவகச்சேரிப் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.