இந்தியாவில் கண்டறியப்பட்ட கொரோனா வேரியண்டுக்கு புதிய பெயர் சூட்டியது உலக சுகாதார அமைப்பு!
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் கடந்த ஆண்டு தொடங்கிய நிலையில் ஆண்டின் இறுதியில் உருமாறிய கொரோனா வைரஸ் சில நாடுகளில் கண்டறியப்பட்டது. பிரிட்டன், பிரேசில், தென் ஆப்பிரிக்காவில் புதிய வகை கொரோனா தொற்று பதிவு செய்யப்பட்டது..
அதே போல கடந்த ஆண்டு அக்டோபரில் இந்தியாவிலும் உருமாறிய கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது, அதே போல அதன் புதிய திரிபும் கண்டறியப்பட்டது. எனினும் இதனை இந்திய வகை கொரோனா என அழைப்பதற்கு மத்திய அரசு ஆட்சேபம் தெரிவித்திருந்தது,
இந்நிலையில் இந்தியாவில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் கண்டறியப்பட்ட B.1.617.2 எனும் கொரோனா வேரியண்ட், இனி ‘டெல்டா’ (Delta) வேரியண்ட் என அழைக்கப்படும் என உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது.
அதே போல இந்தியாவில் கடந்த அக்டோபரில் முதல் முறையாக கண்டறியப்பட்ட B.1.617.1 எனும் கொரோனா வகை இனி ‘கப்பா’ (Kappa) வேரியண்ட் என அழைக்கப்படும் எனவும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இந்த புதிய பெயர்கள் க்ரீக் எழுத்துக்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன.
இது தொடர்பாக உலக சுகாதார அமைப்பின் தொழில்நுட்ப பிரிவின் தலைவர் மருத்துவர் மரியா வேன் கெர்கோவ் கூறுகையில், முக்கியமான அறிவியல் தகவல்களை தாங்கி நிற்கும் அறிவியல் பெயர்கள் ஆராய்ச்சிகளின் தொடர்ந்து பயன்படுத்தப்படும், புதிய பெயர்கள் தற்போது இருக்கும் அறிவியல் பெயர்களை மாற்றாது என தெரிவித்தார்.
இந்தியாவில் கண்டறியப்பட்ட இரண்டு வகை உருமாறிய கொரோனா தொற்றும் பெருவாரியான பரவலுக்கு வித்திட்டு இரண்டாவது அலை பரவல் ஏற்பட காரணமாக அமைந்தது. இந்த வேரியண்டை சர்வதேச அளவில் ஆபத்துக்குரியது என உலக சுகாதார நிறுவனம் அறிவித்தது.
முன்னதாக கொரோனா தொற்றின் புதிய வகைகளை, கண்டறியப்படும் நாடுகளின் பெயரால் அவை அழைக்கப்படக்கூடாது என உலக சுகாதார நிறுவனம் கூறியிருந்தது.
இந்தியாவில் கண்டறியப்பட்ட B.1.617 வேரியண்ட் அதிகாரப்பூர்வமாக 23 நாடுகள்/பிரதேசங்களிலும், அதிகாரப்பூர்வமற்றவகையில் மேலும் 7 பிரதேசங்களிலும் கண்டறியப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்தது.
B.1.617.2 கொரோனா வேரியண்டை இந்திய வகை கொரோனா என குறிப்புடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்த மத்திய அரசு, அது போன்ற குறிப்பிடும் பதிவுகளை நீக்குமாறு கடந்த மாத தொடக்கத்தில் அனைத்து சமூக வலைத்தளங்க்களுக்கும் மத்திய அரசு அறிவுறுத்தியது. இதே போன்ற நடவடிக்கையை சிங்கப்பூர் அரசும் மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.