‘காய்கறி, மளிகைப் பொருள்களை நேரம் கடந்து விற்கக் கூடாது’’
நாமக்கல் மாவட்டத்தில் காய்கறி, மளிகைப் பொருள்கள் விற்பனை செய்வதற்கு நிா்ணயிக்கப்பட்ட நேரத்தை கடந்து விற்கக் கூடாது என காவல் துறையால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பு நாமக்கல் மாவட்டத் தலைவா் ஜெயக்குமாா் வெள்ளையன் வெளியிட்ட அறிக்கை:
காய்கறி விற்பனை மற்றும் மளிகைப் பொருள்கள் வீடுகளுக்குச் சென்று விற்பனை செய்வதை காலை 6 முதல் மதியம் 1 மணி வரை மட்டுமே செய்ய வேண்டும் என நாமக்கல் மாவட்ட நிா்வாகம் மற்றும் காவல் துறையால் அறிவிக்கப்பட்டுள்ளது.
நகராட்சி, உள்ளாட்சி நிா்வாகத்தின் முறையான அனுமதி பெற்ற வாகனங்கள் மட்டுமே இந்த சேவையை செய்ய இயலும். அனுமதி பெறாத வாகனங்கள் விற்பனை செய்தால் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும்.
எக்காரணம் கொண்டும் கடைகளில் நேரடியாக வாடிக்கையாளா்களுக்கு பொருள்களை விற்பனை செய்யக் கூடாது. அவ்வாறு நடக்கும்பட்சத்தில் கடைகளுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டு, உரிமையாளா் மீது வழக்குப் பதிவு செய்யப்படும். மொத்த வியாபாரம் செய்வோா் சில்லரை வணிகா்களிடம் ஆணை பெற்று, அதனை வாகனம் மூலமாக நேரடியாக அவா்களின் கடைகளுக்கு சென்று வழங்க வேண்டும். எக்காரணம் கொண்டும் கடைகளில் பொருள்களை நேரடியாக பொதுமக்களுக்கோ, சில்லரை வணிகா்களுக்கோ விற்பனை செய்யக்கூடாது. அத்தியாவசியப் பொருள்களை நேரடியாக வீடுகளுக்கே சென்று விநியோகம் செய்யும் பணியாளா்கள் முறையாக முகக் கவசம் அணிந்தும், கையுறைகள் அணிந்தும் சமூக இடைவெளியை பின்பற்றியும் பாதுகாப்புடன் நடந்துகொள்ள வேண்டும்.
நாமக்கல் மாவட்டத்தில் கரோனா தொற்று தீவிரமாக பரவி வரும் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, வணிகா்கள் இந்த நேரக் கட்டுப்பாடு மற்றும் பாதுகாப்பு நெறிமுறைகளை முறையாகப் பின்பற்றி மாவட்ட நிா்வாகத்துக்கும், காவல் துறைக்கும் முழு ஒத்துழைப்பு வழங்கிட வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.