கொரோனாவைக் காட்டி வெளிநாடுகளில் நிதி வசூலிக்க கூட்டமைப்பு முயற்சி! – அரசு குற்றச்சாட்டு.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு நிதியுதவி வழங்க வேண்டாம் என வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்களிடம் கேட்டுக்கொள்கின்றோம் என்று இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன கோரிக்கை விடுத்துள்ளார்.
கொவிட் -19 இற்கான தடுப்பூசி உட்பட மருத்துவ உபகரணங்களை கொள்வனவு செய்வதற்கு நிதியுதவி வழங்குவதற்கு வெளிநாட்டில் உள்ளவர்கள் தயாராகவே இருக்கின்றனர். இதற்கான அனுமதியை அரசு வழங்கினால் திட்டத்தை செயற்படுத்தக்கூடியதாக இருக்கும் என்று கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரன் விடுத்துள்ள அறிவிப்புக்கு பதிலடி கொடுக்கும் விதத்திலேயே இராஜாங்க அமைச்சர் இவ்வாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
“இந்த நாட்டில் வாழும் மக்களுக்கு 30 வருடங்கள் கூட்டமைப்பினர் எவ்வாறான ஊசியை ஏற்றினர் என்பது எமக்குத் தெரியும். அரசால் மட்டுமே தடுப்பூசி கொள்வனவு செய்ய முடியும். தனியார் நிறுவனத்தால் கொள்வனவு செய்ய முடியாது.
எனவே, தற்போதைய சூழ்நிலையைப் பயன்படுத்தி நிதி திரட்டிக்கொள்வதற்கான முயற்சியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இறங்கியுள்ளது. அவர்களின் போலிப் பரப்புரையை நம்ப வேண்டாம் என வெளிநாட்டில் வாழும் அனைத்து இன மக்களிடமும் கேட்டுக்கொள்கின்றோம்” என்றும் இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன கூறினார்.