கொரோனாவால் பெற்றோரை இழந்து நிற்கும் குழந்தைகள் எண்ணிக்கை இத்தனையா? – புள்ளிவிவரம்!
இந்தியாவில் கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளின் எண்ணிக்கை குறித்து உச்சநீதிமன்றத்துக்கு புள்ளிவிவரம் அளிக்கப்பட்டுள்ளது.
உச்சநீதிமன்றத்தில் குழந்தைகள் காப்பகங்கள் குறித்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது இந்தியாவில் கொரோனாவால் இதுவரை தாய், தந்தை என இருவரையுமே இழந்த குழந்தைகளின் எண்ணிக்கை 1,742 என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த மேலும் சில தகவல்களும் உச்சநீதிமன்றத்திடம் சமர்பிக்கப்பட்டுள்ளன.
குழந்தைகள் காப்பகங்கள் குறித்த வழக்கை தாமாகவே முன்வந்து விசாரித்து வரும் உச்சநீதிமன்றம் கொரோனா வைரஸ் தொற்றால் பெற்றோர்களை இழந்த குழந்தைகளின் எண்ணிக்கை எவ்வளவு என்ற தகவலை அளிக்கும்படி கேட்டிருந்தது.
இந்நிலையில் இது குறித்து குழந்தைகள் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான தேசிய ஆணையம் அளித்துள்ள தகவலின்படி கடந்த ஆண்டு மார்ச் முதல் 9346 குழந்தைகளின் பெற்றோர் கொரொனாவால் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதில் 1,742 குழந்தைகள் தந்தை, தாய் என இருவரையும் இழந்துள்ளதாகவும், இதிலும் 140 குழந்தைகள் கைவிடப்பட்ட நிலையில் இருப்பதாக
இது தவிர 7,464 குழந்தைகள் பெற்றோர் இருவரில் ஏதேனும் ஒருவரை இழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குழந்தைகள் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான தேசிய ஆணையம் வடிவமைத்துள்ள “Bal Swaraj” என்ற இணையத்தில் ஒவ்வொரு மாவட்ட நிர்வாகமும் பெற்றோரை இழந்த குழந்தைகள் குறித்த தகவலை பதிவேற்ற வசதி ஏற்படுத்தப்பட்டதாகவும், இந்த தகவலின்படியே இந்த தகவல்கள் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
25 மாநிலங்கள், 5 யூனியன் பிரதேசங்கள் அளித்துள்ள இந்த தரவுகளின் அடிப்படையில் அதிகபட்சமாக மத்திய பிரதேசத்தில் 318 குழந்தைகள் பெற்றோரை இழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிகார் (292, உத்தரப்பிரதேசம் (270) அடுத்த இடங்களில் உள்ளன.
கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கான திட்டங்களை செயல்படுத்த செயலாளர் மட்டத்திலான அதிகாரிகளை நியமிக்க வேண்டும். குழந்தைகளின் விபரங்களை மத்திய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையத்துக்குத் தெரிவிக்க வேண்டும். மத்திய அரசானது பி.எம் கேர் நிதியம் மூலம் இந்த குழந்தைகளுக்காக வகுத்துள்ள திட்டங்கள் அனைத்தையும் தெரிவிக்க வேண்டும் என்று தமிழகம், கேரளா, சட்டீஸ்கர், குஜராத், கர்நாடகா உள்ளிட்ட 10 மாநிலங்களுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.