திரவ ஆக்சிஜன் பயன்பாடு: குறிப்பிட்ட தொழில்களுக்கு தற்காலிக தளர்வு
கொரோனா சிகிச்சையை முன்னிட்டு திரவ ஆக்சிஜன் பயன்பாட்டுக்கு விதிக்கப்பட்ட தடைகளை தளர்த்தி சில தொழில்களின் தற்காலிக பயன்பாட்டிற்கு மத்திய அரசு செவ்வாய்க்கிழமை அனுமதித்துள்ளது. உணவு பதப்படுத்தல், கட்டுமானம் உள்ளிட்ட தொழில்களுக்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.
கொரோனா நோயாளிகளுக்கும் மருத்துவமனைகளுக்கும் பயன்படுத்தும் திரவ மருத்துவ ஆக்சிஜனுக்கு கடந்த சில மாதங்களாக பல மாநிலங்களில் பற்றாக்குறை ஏற்பட்டதால் ஏராளமானோர் உயிரிழந்தனர். இந்த அத்தியாவசிய அவசரத் தேவையை முன்னிட்டு மத்திய அரசு, தொழில்துறைக்கு திரவ ஆக்சிஜன் பயன்பாட்டிற்கு தடை விதித்தது.
கடந்த ஏப்ரல் 22-ஆம் தேதி முதல் குறிப்பிட்ட 9 தொழில்கள் பயன்பாட்டைத் தவிர மற்ற தொழில்களின் உபயோகத்துக்கு தடைவிதித்து மாநில தலைமைச் செயலர்களுக்கு மத்திய உள்துறைச் செயலர் அஜய்பல்லா உத்தரவிட்டிருந்தார்.
இந்த நிலையில், தற்போது ஆக்சிஜன் தேவை குறைந்துள்ள நிலையில், சில தொழில்களுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளதால், மத்திய வர்த்தகத் துறையில் உள்ள தொழில் ஊக்குவிப்பு மற்றும் உள்நாட்டு வர்த்தகப் பிரிவு (டிபிஐஐடி), சில தொழில்களுக்கு ஆக்சிஜன் விநியோகத்தை மீண்டும் வழங்க மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு முன்மொழிந்தது.
ஏற்றுமதி உற்பத்தி செய்யும் சிறு, குறு, நடுத்தர தொழில் அமைப்புகள், உணவு பதப்படுத்துதல் தொழில் அலகுகள், கட்டுமானத் தொழில் தொடர்புடைய தொழிற்சாலைகள் போன்றவற்றுடன், சுத்திகரிப்பு நிலையங்கள், எஃகு, அலுமினியம், செப்பு பதப்படுத்தல் ஆலைகள் போன்றவற்றுக்கும் ஆக்சிஜன் அளிக்க தளர்வு கோரியது.
இந்தக் கோரிக்கையை ஏற்று தற்காலிகமான அடிப்படையில் திரவ ஆக்சிஜனை பயன்படுத்த இந்தத் தொழில்களுக்கு அனுமதித்து மத்திய உள்துறை அமைச்சகம், மத்திய வர்த்தக துறையின் டிபிஐஐடி பிரிவுக்கு குறிப்பு அனுப்பியுள்ளதாக செவ்வாய்க்கிழமை தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், அந்த மாநிலங்களில் மருத்துவமனைகள், மற்ற மருத்துவ தேவைகளுக்கு வழங்கப்படுவதை உறுதி செய்யப்பட வேண்டும் என்றும் மருத்து தயாரிப்பு ஆலைகள், ஆக்சிஜன் உருளைகள் தயாரிப்பு, மருத்துவ பேக்கிங், பாதுகாப்புப் படைகள் போன்றவற்றுக்கும் தேவையான திரவ ஆக்சிஜன் முன்னுரிமையுடன் தடையின்றி கிடைக்க வேண்டும் என்றும் இந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.