”சாதிப்பற்று, மூடநம்பிக்கையால் குழந்தைத் திருமணங்கள் அதிகரிக்கின்றன” – கமல்ஹாசன்
”சாதிப்பற்று, மூடநம்பிக்கை போன்ற பல்வேறு காரணங்களால்தான் குழந்தை திருமணங்கள் அதிகரிக்கின்றன. அரசு உடனடியாக கவனம் செலுத்தவேண்டும்” என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.
இன்று, அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”எந்த ஒரு பேரிடரின்போதும் அதற்குப்பின்னரும் பெரும் தாக்கங்களை எதிர்கொள்கிறவர்கள் இளம் சிறார்கள். குறிப்பாக, பெண் குழந்தைகள். எளிதாக கல்வி இடைநிற்றல், பாலியல் வன்கொடுமைகள், குழந்தைத் திருமணங்கள் என ஆளாகிவிடுகிறார்கள். கொரோனா ஊரடங்கில் தமிழகத்தில் குழந்தைத் திருமணங்கள் அதிகரித்து வருவதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
சேலம், தர்மபுரி, திண்டுக்கல், ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் அதிகமாக நடைபெறுகின்றன. புள்ளிவிவரங்களின்படி கடந்த 2020 மே மாதத்தில் மட்டுமே சேலத்தில் 98, தர்மபுரியில் 192 என தமிழகத்தில் 318 குழந்தைத் திருமணங்கள் நடைபெற்றுள்ளன. இது, முந்தைய ஆண்டுகளின் எண்ணிக்கையைக்காட்டிலும் மிக அதிகம்.
அறியாமை, மூடநம்பிக்கை, சாதிப்பற்று, வறுமை, ஊரடங்கு காலத்தில் திருமணச்செலவுகள் குறைவு உள்ளிட்ட பலக்காரணங்களால்தான் குழந்தைத் திருமணங்கள் நடைபெறுகின்றன. தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும்” என்று அக்கறையுடன் கோரிக்கை வைத்திருக்கிறார்.
இதற்கு முன்னதாக, கொரோனா தொற்று பரவலை கருத்தில் கொண்டு கடந்த ஆண்டு ஏப்ரல் – மே மாத வாக்கிலும், தற்போதும் தமிழகத்தில் ஊரடங்கு நடைமுறையை அமல் செய்துள்ளது அரசு. இந்நிலையில் இந்த ஊரடங்கை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி தமிழகத்தில் குழந்தை திருமணம் அரங்கேற்றம் என்பது அதிகரித்து வருவதாக CHILD RIGHTS AND YOU என்ற அமைப்பு குழந்தை திருமணங்கள் குறித்த புள்ளி விவரத்தை வெளியிட்டுள்ளது.