பரியேறும் பெருமாள் – ஒரு பார்வை
முதல் காட்சியே கறுப்பி என்ற ஒரு நாயை இரெயில் தண்டவாளத்தில் வைத்து கொடூரமாக கொலை செய்யப்படும் காட்சியுடன் திரைப்படம் துவங்குகின்றது. சமூக அவலத்தை எடுத்து சொல்லும் கருத்துள்ள, சோகத்தை அள்ளிகொட்டும் கிராமத்துப்பாடல்.
அடுத்து ஆங்கில மீடியம், தமிழ் மொழிக் கல்வி என கல்லூரிக்குள் பார்வையாளர்களை அழைத்து செல்கின்றனர். அங்கு கிடைக்கும் ஒரு பெண் நட்பு கதாநாயகனுக்கு படிக்கும் உந்து சக்தியை தருகிறது. கல்லூரித்தோழி தனது நண்பனான கதிரை தன் வீட்டு கல்யாணத்திற்கு அழைப்பது, கதிர் அவமானப்படுத்தப்படுவது என கதை நகருகிறது.
சாதாரணமாக தமிழ்திரைப்படங்களில் போன்று, வலுகட்டாயமாக பெண்ணை கடத்தி செல்லுவது , திருமணம் என இல்லாது , மாறுபட்ட ஆளுமையான கதிராக படம் நிறைவு பெறுகின்றது இப்படத்தின் சிறப்பாகும்.
முதன்மை கதாப்பாத்திரத்தை இரெயில் தண்டவாளத்தில் கட்டிவைத்து கொலை முயற்சி செய்வதும், நாயை இரயில் தண்டவாளத்தில் கட்டிவைத்து கொலை செய்வது போன்ற காட்சிகள் விழுப்புறத்தில் கொலையுண்ட இளவரசனை நினைவூட்டுவதை மறுக்க இயலாது..
தமிழ் மண்ணின் கலைகள், இயல்பான உரையாடல்கள், கலைகளை உருவகப்படுத்திய விதம் அருமை. . கதைத்தளத்திற்கு பொருந்தும் பாடல் வரிகள், பாடல்கள் வரிகள் இசை அழகு. கதிரின் நடிப்பும் அருமை. பரியன் தந்தையாக நடித்த நடிகரின் நடிப்பு அபாரம். திரைக்கதை விருவிருப்பாக நகர்கிறது.
மாரி செல்வராஜ் இயக்கத்தில் பா. ரஞ்சித்தயாரிப்பில் கதிர், ஆனந்தி முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து உருவாகியுள்ள திரைப்படம் ஆகும். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். இத்திரைப்படம் 2018 செப்டம்பர் 28 ஆம் நாள் திரைக்கு வந்தது.
பிரான்ஸ் Toulouse இந்தியத்திரைப்பட விழாவில் மூன்று விருதுகளை பெற்றது. புதுச்சேரி நவதர்சன் திரைப்படக்கழகம் சார்பில் இந்திய திரைப்பட விழாவில் சங்கர்தாஸ் சுவாமிகள் விருதினையும் பெற்றுள்ளார் திரைப்பட இயக்குனர் மாரி செல்வராஜ். 2019 க்கான சிறந்த திரைப்படத்திற்கான விருதினை யமகா பஃசினோ திரைவிழாவில் பெற்றது குறிப்பிடத்தக்கது.
முரண்கள் :
முதன்மை பெண் கதாப்பாத்திர படைப்பு: படிப்பில் கெட்டி ஆனால் சமூக அறிவில் சூனியம். 90 களிலுள்ள பெண்களை போல் உணர்ச்சிவசப்படுகின்றார். பையன் பிரச்சினையில் உச்சத்தில் உயிர் போகும் போராட்டத்தில் உள்ளார்; பெண் கதாப்பாத்திரமோ மிட்டாய் வாங்கி கொடுத்து பக்குவமற்று உருகுகிறது, அழுகின்றது, சிரிக்கின்றது, சினுங்குகின்றது.!!!
கல்லூரி முதல்வர்: கல்லூரி முதல்வர் பதவியை தன்னால் திரண்பட நேரடியாக செயல்படுத்த இயலாது மறைமுகமாக ஒரு கோஷ்டிக்கு இடம் கொடுத்து இன்னொரு கோஷ்டியை அடக்க நினைக்கும் நிர்ஜீவனான அதிகார நிலைபாடு. படிப்பு நம்மை உயர்த்தும் என்ற நல்ல கருத்தை முன் வைய்த்தவர். நாம் க்கல்வி கற்று உயர்பதவிக்கு வருவதால் அடுத்தவன் நம் முன் கைகட்டி நிற்பான் என போதிக்கின்றது; கைகட்டி நிற்பதும், கைகட்டவைத்து நிற்க வைக்கப்படுவதும் இழிவு நிலையே.
மாணவர்களுக்குள் ஒரு பிரச்சினை என்றதும் சரியான நடவடிக்க எடுக்க இயலாது “நம்மால் அவன்களை அடக்க இயலாது, இவன் அடக்கட்டுமே, போராடி சாகட்டும் போன்ற வசனங்கள் சமூக வளர்ச்சிக்கு என்ன சொல்ல வருகிறது என சிந்திக்க வேண்டியுள்ளது.
பேராசிரியை கதப்பாத்திரம் : மாணவரும் மாணவியும் பேருந்து நிலையத்தில் பேசிக்கொண்டு இருக்கின்றனர். கரடி மாதிரி புகுந்த ஆசிரியையை கண்டதும் மாணவர்கள் கண்டு கொள்ளவே இல்லை. ஆசிரியையோ,” நான் உனக்கு தேவதையா, எத்தனை தேவதை உண்டு என வினவும், வழியும் உரையாடல்கள் அரோசகமாக இருந்தது. இரு மாணவர்களுக்கு பிரச்சினை என்றால், சரியாக பிரச்சினையை புரியவைக்காது பெண் மாணவியிடம்” அவன் உன்னை காதலிக்கான்” என கல்யாணத் தரகர் வேலை செய்யும் அவலம்.
பெண் அப்பா கதாப்பாத்திரம்: கல்யாணத்திற்கு வந்த பையனை தேவையில்லாது விசாரிப்பது, அறையில் பூட்டி வைத்து அடிவாங்க காரணமாக இருப்பது, அப்புறம் கெஞ்சுவது, கடைசி எல்லாம் முடிந்த பின்பு போய் ” என்ன நடக்குமோ தெரியாது அப்ப பாப்போம்” ன்னு எதிர்பார்ப்பை உருவாக்குவது. இவ்வளவு நேர்மறையான தகப்பன் தன் பெண் பிள்ளையிடம் வினவாது இன்னொரு பெற்றோரின் மகனை அடிக்கும் மன நிலை என்னது.
ஆணவக்கொலைகள் செய்யும் முதியவர் கதாப்பாத்திரம்: எந்த படத்திலும் காணாத வித்தியாசமான வில்லன். இரக்கத்தோடு மதிப்புடன் காண வேண்டிய முதியவர்களை கண்டாலே இனி பயம் தான் வரும்.
அரசியல் சட்டம் படிக்கும் சட்டக்கல்லூரி மாணவர்களே ஜாதிய கட்டமைப்பில் நின்றுகொண்டு கல்வியை தொடர்ந்தால், சாதாரண கல்லூரி மாணவர்களின் நிலை தான் என்ன! இளம் தலைமுறையிடம் இருந்து அரசியல் மாற்றத்தை எதிர்நோக்க இயலுமா?
சமூகத்தில் புரையோடிகொண்டிருக்கும் அழுகி கொண்டிருக்கும் ஜாதி என்ற புண்ணை நவீன சிந்தனையால் தீர்வு தேடாது அடிமட்ட, சிந்தனையுடன் வன்மத்துடன் எதிர்கொள்வது போல் எடுக்கப்பட்ட பல காட்சிகள் புண்ணில் வேல் பாய்ப்பது போல் தான் உள்ளது.
சமூகத்தில் மற1ந்து வரும் ஜாதிய அடையாளங்களை படமிட்டு காட்டி இளம் சமுதாயம் மனதில் ஒரு வன்மத்தை பரவவும் பல காட்சிகள் காரணமாக அமையும். வரலாற்று சம்பவங்களை வைத்து எடுக்கப்பட்ட சமூக கருத்துள்ள ஆனால் வன்முறை ஜாதித் திரைப்படமாகவே உள்ளது.
ஒரு காட்சிyஇல் மாணவர் கதிர் மாணவிகள் கழிவறையில் விழ வைக்கப்படுவார். மாணவிகள் அலறுவதும் கதிரை கண்டு பாம்பை காண்பது போல் நெளிவதும் ஓடுவதும் மிகவும் அபத்தமாக உள்ளது. சட்டம் படிக்க வரும் மாணவிகள் இந்தளவு கோழைகளும் பயந்தாம் கொள்ளிகளுமா?
எத்தனை யுகங்களுக்கு தான் கல்லூரி சூழல், கல்லூரி பேராசிரியர்களை குற்றவாளிகளாக உருவகுப்பீர்கள்? அரசியலமைப்பு சட்டத்தில் கீழ் இயங்கும் அரசு , அரசின் கீழ் இயங்கும் சுதந்திர இந்தியாவின் கல்வி நிலையங்களில் நிலை இது தானா?
திரைப்படம் என்பது கோஷம் அல்ல, அறிவுரையல்ல, ஆனால் மனித மனதை சிந்திக்கவைக்க வேண்டும். மனித மனதில் அழகு உணர்ச்சிகளை உணரச்செய்பவை ஆகும். மனிதர் மத்தியில் எந்த பெயரிலும் வன்மம் விதைக்கும் கருவியாக மாறக்கூடாது. தமிழக மாணவர்கள் மனங்களிலும் பெரிய எதிர்மறையான அதிர்வை ஏற்படுத்தியிருக்கிறது என்றால் மிகையல்ல. தமிழ்கத்தில் புதிதாக உருவாகும் நீல அரசியலின் பிரசாரப்படங்களில் இதையும் உட்படுத்தலாம்.