இலங்கையில் சீன ஆதிக்கம்: தமிழகம், கேரளத்துக்கு அச்சுறுத்தல்
தென்கிழக்கு ஆசிய புவி அரசியலில், இலங்கை – சீனா உறவு இன்றைக்கு மேன்மேலும் பலப்பட்டு வருகிறது. இது இந்தியாவுக்கும் குறிப்பாக தென் மாநிலங்களான தமிழகத்திற்கும் கேரளத்திற்கும் நல்லதல்ல. இங்கு இருந்து நாம் வெறும் ஹம்பந்தோட்டாவில் மட்டுமே சீனாவின் ஆதிக்கம் இருப்பதாக பார்க்கின்றோம்.
இவ்விஷயத்தில் தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகளும் மக்களும் புரிந்துகொள்ள நிறைய இருக்கிறது. ஹம்பந்தோட்டா மட்டுமல்லாமல் கொழும்பு துறைமுகத்திலும் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்துக்கொண்டு வருகிறது. அங்கே கொழும்பில் சீனா சிட்டி (China city) என்று தனியாக ஒன்று உருவாகிக்கொண்டு வருகின்றது. மற்றொரு பக்கம் சீனாவின் போர்க் கப்பல்கள் இந்து மகா சமுத்திரத்தில் இருக்கின்றன. இதேபோல இராமேசுவரம் அருகே நெடுந்தீவு, அனலைத்தீவு, நைனாத் தீவுகளில் மின்சார உற்பத்தி செய்ய சீனாவிற்கு இலங்கை அனுமதி அளித்துள்ளது.
இதையெல்லாம் பார்க்கும்போது வெறும் ஹம்பந்தோட்டாவை மட்டும் சொல்லக் கூடாது. குமரி முனையில் இருந்து கொழும்பு பக்கம் கிட்டத்தட்ட 290 கிலோ மீட்டர் சீனா நெருங்கி விட்டது. இதுவரை வடகிழக்கிலும் வடமேற்கிலும் முறையே சீனா, பாகிஸ்தான் மூலம் போர்களைச் சந்தித்தோம். இனிமேல் தெற்கே சீனாவின் ஆதிக்கத்தால் கடல்வழியாக பிரச்சினைகள் எழலாம். அதை பாதுகாக்க வேண்டிய ஒரு சூழலில் இருக்கிறோம் என்ற புரிதல் இந்தியாவிற்கு வேண்டும்.
வெறும் ஹம்பந்தோட்டா மட்டும்மல்லாது இலங்கையைச் சுற்றிலும் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்துவிட்டது. மற்றொரு புறம் ஜப்பான், பிரான்ஸ், அமெரிக்கா- டிகோ கார்சியா எனவும் இந்து மகா சமுத்திரத்தில் ஆதிக்கங்கள் இருக்கின்றன என்பதை உணர வேண்டும். வெறும் ஹம்பந்தோட்டா மட்டும் 99 வருட குத்தகை கிடையாது. இலங்கையைச் சுற்றி கிழக்கே திரிகோணமலை உட்பட சீனாவின் ஆதிக்கம் வளர்ந்து வருகின்றது.
கொழும்புத் துறைமுக நகரத் திட்டம், இலங்கையைத் தன்னுடைய காலனியாக மாற்றுவதற்கான சீனாவின் நீண்டகாலத் திட்டமிடல் என்ற கருத்துகளை, தென் இலங்கையின் அடிப்படைவாத சக்திகளும் உள்வாங்கிப் பிரதிபலிக்க ஆரம்பித்திருக்கின்றன. கொழும்புத் துறைமுக நகருக்கான சிறப்புச் சட்டம் மூலம், இலங்கையில் இருந்து துறைமுக நகரை இன்னொரு நாடாகப் பிரகடனப்படுத்தும் அளவுக்கான அதிகாரங்களை வழங்குவதாகக் குற்றஞ்சாட்டப்படுகின்றன.
துறைமுக நகருக்கான ஆணைக்குழு ஒன்று மாத்திரமே, இலங்கை அரசுக்கும் சீனாவுக்கும் இடையிலான ஒரு தொடர்பாடலாக இருக்கும் நிலை உருவாகி இருக்கின்றது. அதுவும், இலங்கை அதிபர் நினைத்தால், துறைமுக நகருக்கான ஆணைக்குழுவின் உறுப்பினர்களாக வெளிநாட்டினரை நியமிக்க முடியும் என்கிற அதிகாரங்களையும் குறித்த சட்டமூலம் வழங்குகின்றது.
அப்படியான நிலையில், ஏற்கெனவே சீனாவின் செல்லப்பிள்ளைகளாக, அவர்களின் சொற்படி ஆடிக் கொண்டிருக்கும் ராஜபக்ஷேக்கள், சம்பந்தப்பட்ட ஆணைக்குழுவுக்கும் சீனப் பிரதிநிதிகளையே நியமித்து, துறைமுக நகரைத் தனிநாட்டுக்குரிய அதிகாரங்களோடு சீனாவிடம் வழங்கிவிடும் வாய்ப்புகள் நிறையவே உண்டு.
துறைமுக நகரச் சிறப்புச் சட்டமூலம் தொடர்பிலான உயர் நீதிமன்ற வழக்கொன்றில், அதிபர் செயலாளரின் சார்பில் ஆஜரான அதிபர் வழக்கறிஞர் ரொமேஷ் டி சில்வா, “இலங்கை அரசியலமைப்பில், நாட்டின் பிரதம நீதியரசராக இலங்கையர் ஒருவர் நியமிக்கப்பட வேண்டும் என்கிற கோடிடல்கள் இல்லை. எனவே, வெளிநாட்டினர் ஒருவரைக்கூட நியமிக்கலாம்” என்று வாதிட்டிருக்கின்றார். அதன்மூலம், துறைமுக நகர ஆணைக்குழுவுக்கு எந்தத் தரப்பினரையும் நியமிக்க முடியும் என்ற தொனிப்பட பேசியிருக்கின்றார். இப்படி, நீதிமன்றத்தில் தன்னுடைய வாதங்களை முன்வைத்த ரொமேஷ் டி சில்வாவைத்தான், ராஜபக்ஷேக்கள் புதிய அரசியலமைப்பை வரைவதற்கான குழுவின் தலைவராக நியமித்து இருக்கிறார்கள்.
மேலும்,கொழும்புத் துறைமுக நகருக்கான சட்டமூலத்தில், குடிவரவு – குடி உரிமை விடயங்களை, சீனா துறைமுக நகரமே கவனிக்கும்., இலங்கை அரசுக்கும் (குடிவரவு) துறைமுக நகருக்குள் வந்து செல்லும் வெளிநாட்டுக் குடிமக்களுக்கும் சம்பந்தமில்லை என்பது, சீனா துறைமுக பகுதி தனி நாட்டுக்கான உரித்தான எளிய சான்று என தெரிகிறது.
கடந்த சில நாட்களாக, சீன இளைஞர்கள், இளம் பெண்கள் இலங்கையின் பெருமைகளை சிங்களத்தில் பேசுவது, கலாசார நடனங்கள் ஆடுவது என்று காணொலிகள் சமூக ஊடகங்களை ஆக்கிரமிக்கின்றன. அதன்மூலம், தென் இலங்கையில் அங்கொன்றும் இங்கொன்றுமாக எழுந்திருக்கின்ற துறைமுக நகரத் திட்டத்துக்கு எதிரான அலைகளை அடக்க முடியும் என்று சீனாவும் அதன் ஏவலாளிகளும் நினைக்கின்றன.
கட்டாயம் விழித்துக்கொண்டேயாக வேண்டிய சிக்கலான நிலையில் இந்தியா வைக்கப்பட்டிருக்கிறது, தமிழ்நாடும் கேரளமும் ஆபத்துகளை எதிர்கொள்ளக்கூடிய காலம் வெகுதொலைவில் இல்லை என்றால் வியப்பதற்கில்லை.