பாபா ராம்தேவ் கருத்துக் கூற தடை விதிக்க முடியாது: நீதிமன்றம்
அலோபதி மருத்துவத்திற்கு எதிராக கருத்து வெளியிட பாபா ராம்தேவிற்குத் தடை விதிக்க முடியாது என்று தில்லி உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
அலோபதி மருத்துவம் குறித்து பாபா ராம்தேவ் கூறிய கருத்துகள் அடிப்படை சுதந்திரத்தின் கீழ் வரக்கூடியது என்றும் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.
பாபா ராம்தேவிற்கு எதிராக தில்லி மருத்துவ கவுன்சில் வழக்கு தொடர்ந்தது. இதனை விசாரித்த தில்லி உயர்நீதிமன்றம், அலோபதி மருத்துவத்திற்கு எதிராக கருத்து வெளியிட பாபா ராம்தேவிற்கு தடை விதிக்க முடியாது என்று கூறி வழக்கை ஜூலை 13-ம் தேதிக்கு ஒத்திவைத்தது.
தற்போது கடைப்படிக்கப்பட்டு வரும் அலோபதி மருத்துவ முறை முற்றிலும் முட்டாள்தனமானது. அரசால் அங்கீகரிக்கப்பட்ட ரெம்டெசிவிர் உள்ளிட்ட மருந்துகள் மக்களின் உயிரைக் காப்பதிலிருந்து தோல்வியடைந்துவிட்டதாக பாபா ராம்தேவ் தெரிவித்திருந்தார்.
அலோபதி மருந்துகளாலும், மருத்துவத்தாலும் லட்சக்கணக்கான உயிர்களை இழந்துள்ளோம். இந்த முறையை முற்றிலும் நீக்கிவிட்டு, ஆயுா்வேத முறையை அமல்படுத்த வேண்டும் என்று பாபா ராம்தேவ் விமா்சனம் செய்திருந்தார்.