மட்டு. பொலிஸ் காவலில் இறந்த இளைஞனின் சாவுக்கு காரணம் என்ன?
மட்டக்களப்பில் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட இளைஞன், 4 ஐஸ் போதைப் பொருள்கள் அடங்கிய பக்கட்களை வாயில் போட்டு விழுங்கியதன் காரணமாகவே, உயிரிழந்துள்ளதாக பிரேத பரிசோதனையில் தெரிய வந்துள்ளதென போலீசார் தெரிவித்துள்ளனர்.
நேற்று மட்டக்களப்பு – களுவன்கேணி பகுதியைச் சேர்ந்த 22 வயதான இளைஞன் 25 கிராம் ஐஸ் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்டு பொலிஸ் நிலைய சிறை கூடத்தில் அடைக்கப்பட்ட போது மயக்கமடைந்த நிலையில் வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற சந்தர்ப்பத்தில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருந்தது.
கைது செய்யப்பட்ட இளைஞன் பொலிஸாரின் தாக்குதலில் உயிரிழந்ததாக உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் போலீசார் மீது குற்றம் சுமத்தியிருந்தனர். இதனையடுத்து உயிரிழந்தவரின் சடலத்தை நீதவான் பார்வையிட்டு, பிரேத பரிசோதனைக்கு உத்தரவிட்டாா்.
இந்த சம்பவம் தொடர்பில் விசேட பொலிஸ் குழு அமைக்கப்பட்டு மேலதிக விசாரணை நடைபெற்று வருகின்றது.
இந்த நிலையில், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் நேற்று நடத்தப்பட்ட பிரேத பரிசோதனையில் குறித்த இளைஞன், 4 பக்கட்டுக்களைக் கொண்ட ஐஸ் போதைப் பொருளை வாயில் போட்டு விழுங்கிய காரணத்தால் , அது நெஞ்சுப் பகுதியின் உள்ளே வெடித்ததில் அவரது நுரையீரல் பாதிக்கப்பட்டு அவர் உயிரிழந்துள்ளதாக பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.