கொரோனாத் தடுப்பூசி ஏற்றுவதில் யாழ். மக்களின் ஆர்வத்தை வரவேற்கின்றோம்! அடுத்தகட்ட தடுப்பூசி விரைவில் கிடைக்கும்.
“கொரோனாவை வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்துவதற்காக ‘சினோபார்ம்’ தடுப்பூசிகளை ஏற்றுவதில் யாழ்ப்பாணம் மாவட்ட மக்கள் காட்டிய ஆர்வத்தை வரவேற்கின்றோம். முதல் கட்டமாக 50 ஆயிரம் தடுப்பூசிகள்தான் யாழ். மாவட்ட மக்களுக்கு வழங்கப்பட்டன. மூன்று நாள்களில் அவை நிறைவடைந்துள்ளன.”
இவ்வாறு இராணுவத் தளபதியும் கொரோனாக் கட்டுப்பாட்டுச் செயலணியின் தலைவருமான ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“இராணுவத்தினர் உள்ளிட்ட கொரோனாத் தடுப்புச் செயலணியினர் மற்றும் சுகாதாரப் பிரிவினர் ஆகியோருக்கு ஒத்துழைப்புக்களை வழங்கி முதல் கட்ட கொரோனாத் தடுப்பூசிகளை யாழ்.மாவட்ட மக்கள் பெற்றுள்ளனர்.
தெரிவு செய்யப்பட்ட கிராம அலுவலர் பிரிவுகள் ஊடாகத்தான் தடுப்பூசி ஏற்றும் செயற்திட்டம் முன்னெடுக்கப்பட்டது. ஆனால், அந்தக் கிராம அலுவலர் பிரிவுகளைச் சாராதவர்களும் தடுப்பூசி ஏற்றிக் கொண்டுள்ளனர். இதனால் ஒதுக்கப்பட்ட தடுப்பூசிகள் விரைவாக முடிவடைந்துள்ளன.
இரண்டாம் கட்டத் தடுப்பூசிகள் விரைவில் யாழ்ப்பாணம் மாவட்டத்துக்கு அனுப்பிவைக்கப்படும். அதேவேளை, வடக்கிலுள்ள ஏனைய மாவட்டங்களிலும் கொரோனாத் தடுப்பூசிகள் ஏற்றும் பணிகள் முன்னெடுக்கப்படும்” என்றார்.