வடக்குக்கு முன்னுரிமையில் தடுப்பூசிகளை வழங்கியதைப்போல் அரசியல் தீர்வையும் கொடுங்கள்! – அரசுக்கு மங்கள அறிவுரை.
“சீனாவின் ‘சினோபோர்ம்’ கொரோனாத் தடுப்பூசிகளை வடக்குக்கு வழங்கி அம்மக்களின் மனங்களை வெல்ல ராஜபக்ச அரசு எடுத்துள்ள நடவடிக்கையை நாம் வரவேற்கின்றோம். அதேபோல் வடக்கு மக்கள் எதிர்நோக்கும் அரசியல் பிரச்சினைகளுக்கும் உரிய தீர்வுகளை வழங்கி அம்மக்களின் முழு மனதையும் வெல்ல அரசு முன்வரவேண்டும்.”
இவ்வாறு முன்னாள் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“கொரோனாத் தொற்றால் வடக்கு மாகாண மக்களும் பெரும் பாதிப்புக்களைச் சந்தித்துள்ளனர். வடக்கிலுள்ள சகல மக்களுக்கும் கொரோனாத் தடுப்பூசிகள் ஏற்றப்பட வேண்டும். அதேபோல் ஏனைய மாகாணங்களிலுள்ள அனைத்து மக்களுக்கும் தடுப்பூசிகள் வழங்கப்பட வேண்டும்.
சீனாவின் தடுப்பூசி விவகாரத்தில் மிகப் பெரிய மோசடி இடம்பெற்றுள்ளது எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் உண்மைத்தன்மையை இலங்கை அரசும் சீனத் தூதரகமும் கூட்டாக அறிவிக்க வேண்டும். அதைவிடுத்து இரு தரப்பும் தனித்தனியே மறுப்புக் கருத்துக்களைத் தெரிவிப்பதில் எவ்வித பயனும் இல்லை.
சீனாவை மட்டும் நம்பி இருக்காமல் முன்னணி நாடுகளிடமிருந்து கொரோனாத் தடுப்பூசிகளை அரசு விரைந்து கொள்வனவு செய்ய வேண்டும்.
நாட்டு மக்களுக்கு ஒரு ‘டோஸ்’ தடுப்பூசியை ஏற்றினால் மட்டும் போதாது. இரண்டாவது ‘டோஸ்’ மருந்தையும் உரிய காலத்துக்குள் ஏற்ற வேண்டும். அப்போதுதான் கொரோனா நோய்த் தாக்கத்திலிருந்து மக்களைப் பாதுகாக்க முடியும்” – என்றார்.