‘எக்ஸ் – பிரஸ் பேர்ல்’ கப்பலை மீட்க மேலதிக மீட்புக் கப்பல்களை அனுப்ப இந்தியா தயார்! – அந்நாட்டுக் கடற்படைத் தளபதி உறுதி
இலங்கைக் கடற்பரப்பில் மூழ்கிக் கொண்டிருக்கும் ‘எக்ஸ் – பிரஸ் பேர்ல்’ கப்பலை மீட்கும் பணிகளில் இந்திய கடற்படையின் உதவியைப் பெற்றுக் கொள்ளும் நோக்கில் இந்தியக் கடற்படை தளபதி அட்மிரல் கரம்பீர் சிங்குடன் இலங்கை கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன தொலைபேசியில் உரையாடியுள்ளார்.
இதன்போது, மீட்பு பணி நடவடிக்கைகளுக்கு இந்திய கடற்படை முழுமையான உதவிகளை இலங்கைக்கு பெற்றுக் கொடுக்குமென இந்தியக் கடற்படைத் தளபதி உறுதியளித்துள்ளார்.
இதை யடுத்து ‘எக்ஸ் – பிரஸ் பேர்ல்’ கப்பல் விபத்துக்குள்ளான நாளில் இருந்து கப்பலை மீட்கும் பணிகளில் இந்தியக் கடற்படையின் முழுமையான ஒத்துழைப்பு கிடைத்து வருகின்றது என கடற்படை ஊடகப் பேச்சாளர் கப்டன் இந்திக்க டி சில்வா தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், தற்போதும் இந்தியாவின் மூன்று ‘டக்’ கப்பல்கள் இலங்கை கடல் எல்லைக்குள் மீட்பு உதவிகளை முன்னெடுத்து வருகின்றன.
தேவைப்படும் பட்சத்தில் மேலும் சில கப்பல்களை அனுப்பவும் தயாராக உள்ளதாக இந்தியக் கடற்படைத் தளபதி, இலங்கைக் கடற்படைத் தளபதிக்கு உறுதியளித்துள்ளார்.
இதேவேளை, ‘எக்ஸ் – பிரஸ் பேர்ல்’ கப்பலில் உள்ள எண்ணெய் கடலில் கசியாத வண்ணம் அவற்றை அகற்றுவதே தமக்குள்ள பிரதான நோக்கமாக உள்ளது எனவும், எவ்வாறு இருப்பினும் எண்ணெய் கசிவு ஏற்பட்டதற்கான அடையாளங்கள் இன்னமும் வெளிப்படவில்லை எனவும் இலங்கைக் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன குறிப்பிட்டுள்ளார்.
“ஒரு சில இரசாயனத் திரவங்கள் வெளியேறுவதை அவதானிக்க முடிகின்றது. அவற்றை அகற்றும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதுடன், இலங்கை கடற்படை அதற்கான பணிகளில் துரிதமாக ஈடுபட்டு வருகின்றது” எனவும் இலங்கைக் கடற்படையின் ஊடகப் பேச்சாளர் கப்டன் இந்திக்க டி சில்வா தெரிவித்துள்ளார்.