சீரற்ற காலநிலை: மின் தடையால் 44 ஆயிரம் பேர் பாதிப்பு!
இலங்கையில் தற்போது நிலவும் மழையுடன் கூடிய சீரற்ற காலநிலையால் 44 ஆயிரம் நுகர்வோருக்கு மின்சார விநியோகம் தடைப்பட்டுள்ளது என மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
இதில் கடந்த இரண்டு நாட்களில் மின் துண்டிப்பு தொடர்பில் 23 ஆயிரம் சம்பவங்கள் பதிவாகியுள்ளன எனவும் மின்சக்தி அமைச்சின் ஊடக பேச்சாளர் சுலக்சன ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
களுத்துறை, குளியாப்பிட்டி, குருநாகல், ஹொரனை, மத்துகம, நாரம்மல, தம்புள்ள, அக்குரஸ்ஸ மற்றும் கேகாலை ஆகிய இடங்களில் மின் தடை ஏற்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எது எவ்வாறாயினும், தற்போது இந்தப் பகுதிகளில் மின் துண்டிப்புகளை சீராக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது எனவும் மின்சக்தி அமைச்சு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, தொடர்ச்சியான மழை காரணமாக மின் தடை ஏற்பட்டுள்ள அதேவேளை, பெரும்பாலான பகுதிகளுக்கு நீர் விநியோகமும் தடைப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.