பயணத் தடை காலத்தில் வாகனங்களில் செல்பவர்களுக்கு எழுந்தமானமாக பி.சி.ஆர். பரிசோதனை!
இலங்கையில் பயணக் கட்டுப்பாட்டு காலப்பகுதியில் வாகனங்களில் பயணம் செய்பவர்களுக்கும் எழுந்தமானமாக பி.சி.ஆர். பரிசோதனையை மேற்கொள்ளும் வேலைத்திட்டத்தை அரசு ஆரம்பிக்க வேண்டும் என விசேட வைத்திய நிபுணர் பேராசிரியர் அர்ஜுன டி சில்வா கோரிக்கை விடுத்துள்ளார்.
அத்தகைய திட்டத்தைச் செயற்படுத்துவதன் மூலம், தேவையற்ற போக்குவரத்துச் செயற்பாடுகளைப் பெரும்பாலும் கட்டுப்படுத்த முடியுமாக இருக்கும் என்பதுடன், வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் காணவும் முடியுமாக இருக்கும் என்றும் ஊடகங்களிடம் அவர் தெரிவித்துள்ளார்.
பயணக் கட்டுப்பாடுகள் நடைமுறையில் உள்ள காலப்பகுதியில் சிலர் தேவையில்லாமல் பயணம் செய்து வருகின்றனர் என்றும், இது மிகவும் தவறான நடவடிக்கை என்றும் அவர் கூறியுள்ளார்.
அத்துடன். பயணக் கட்டுப்பாடு நடைமுறையில் உள்ள காலப்பகுதியில் பி.சி.ஆர். பரிசோதனைகளைக் குறைப்பது நல்லது இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
“பெரும்பாலான கொரோனா நோயாளிகள் இன்னும் அறிகுறியில்லாமல் இருக்கிறார்கள். மேலும், நாடு முழுவதும் பயணக் கட்டுப்பாடு பிறப்பிக்கப்பட்டுள்ள இந்தக் காலத்தில்தான் அதிகளவான பி.சி.ஆர். பரிசோதனைகள் மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு செய்யாது நாட்டை முடக்கிப் பலனில்லை” என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.