ட்விட்டர் நிறுவனத்திற்கு மத்திய அரசு இறுதி எச்சரிக்கை

புதிய டிஜிட்டல் கொள்கைகளை அமல்படுத்துவது தொடர்பாக, ட்விட்டர் நிறுவனத்திற்கு மத்திய அரசு இறுதி நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
சமூக ஊடகங்களில் இந்தியாவின் பாதுகாப்புக்கும், இறையாண்மைக்கும் எதிரான தகவல்கள் பகிரப்படுவதாக குற்றச்சாட்டுகள் நீண்ட காலமாக எழுந்து வந்தன. இதையடுத்து பேஸ்புக், வாட்ஸ்-அப், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக ஊடகங்களை கட்டுப்படுத்தும் விதத்தில் மத்திய அரசு கடந்த பிப்ரவரி மாதம் புதிதாக தகவல் தொழில்நுட்பம் (இடைநிலை வழிகாட்டுதல்கள் மற்றும் டிஜிட்டல் மீடியா நெறிமுறைகள் சட்டம்) விதிகள் 2021-ஐ கொண்டு வந்தது.
புதிய விதிகளின் படி, புகார்கள் குறித்து விசாரிக்க இந்தியாவில் அதிகாரிகளை நியமிக்க வேண்டும் என்பவை போன்ற பல்வேறு அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. மத்திய அரசின் புதிய விதிகளுக்கு சமூக ஊடகங்கள் இணங்கி நடக்க மே 25-ம் தேதி வரை அவகாசம் தரப்பட்டது.
வாட்ஸ் அப், பேஸ்புக் சமூக வலைதளங்கள் இதற்கு சம்மதம் தெரிவித்து, தங்கள் சேவையைத் தொடர்கின்றன. ஆனால் டுவிட்டர் நிறுவனம் மட்டும் புதிய விதிகளை ஏற்றுக் கொள்ள மறுத்து, டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.
இந்நிலையில், புதிய விதிகளின் படி இந்தியாவில் அதிகாரிகளை நியமிக்க டுவிட்டர் நிறுவனத்திற்கு மத்திய அரசு இறுதி வாய்ப்பு வழங்கி உள்ளது. இதை ஏற்க டுவிட்டர் நிறுவனம் தவறும் பட்சத்தில் சட்ட நடவடிக்கைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் எனவும் மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.