‘எக்ஸ் – பிரஸ் பேர்ல்’ கப்பலின் கறுப்புப் பெட்டியைத் தேடும் பணியில் தாமதம்!
கடலில் மூழ்கிக்கொண்டிருக்கும் ‘எக்ஸ் – பிரஸ் பேர்ல்’ கப்பலை அண்மித்த பகுதியிலிருந்து கடல் நீர் மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளன என்று அரச இரசாயன திணைக்களம் தெரிவித்துள்ளது.
ஆய்வுகளுக்காக நீர் மாதிரிகள் சேகரிக்கப்பட்டன என்றும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
விசேட குழுவொன்று ஆய்வு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது என்றும் அரச இரசாயன திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, கப்பலின் கறுப்புப் பெட்டியைக் கண்டுபிடிப்பதற்கான ஒத்துழைப்பை வழங்குமாறு குற்றப் புலனாய்வுத் திணைக்களம், கடற்படையிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
கறுப்புப் பெட்டியில் அடங்கியுள்ள தரவுகள், கப்பல் குறித்த விசாரணைகளை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்கு உதவியாக இருக்கும் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கப்பல் தொடர்பான விசாரணைகளைக் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் விசேட குழுவொன்று முன்னெடுத்து வருகின்றது.
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கோரிக்கை தொடர்பில் கடற்படைப் பேச்சாளர் கப்டன் இந்திக டி சில்வாவிடம் ஊடகங்கள் வினவியபோது, இதற்காக அதிகாரிகளைக் கொண்ட குழுவொன்றை நியமிக்கப்பட்டுள்ளது என்று பதிலளித்துள்ளார்.
எனினும், கடல் கொந்தளிப்பு மற்றும் கப்பலின் தற்போதைய பாதுகாப்பற்ற தன்மை ஆகியவற்றால் கறுப்புப் பெட்டியைத் தேடும் பணிகளில் தாமதம் ஏற்பட்டுள்ளது என்றும் கடற்படைப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.