எக்ஸ் – பிரஸ் பேர்ல்’ கப்பல் பற்றி ஆராய ஜனாதிபதி ஆணைக்குழுவை நியமிக்குக! – கோட்டாபயவுக்குக் கடிதம்
‘எக்ஸ் – பிரஸ் பேர்ல்’ கப்பலில் ஏற்பட்ட தீப்பரவல் மற்றும் அதனால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து ஆராய ஜனாதிபதி ஆணைக்குழு ஒன்றை நியமிக்குமாறு அகில இலங்கை துறைமுக பொதுச்சேவையாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு இந்த விடயம் தொடர்பாக அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது எனச் சங்கத்தின் செயலாளர் தெரிவித்துள்ளார்.
இந்தக் கப்பலில் ஏற்பட்ட விபத்து பற்றி விசாரணைகளை முன்னெடுத்து வருகின்ற குற்றப் புலனாய்வுப் பிரிவினரின் விசேட குழு கப்பலுக்கு அருகே சென்று பார்வையிட்டிருந்ததுடன் இதுவரை 13 பேரிடம் வாக்குமூலத்தையும் பதிவு செய்துள்ளது.
இதேவேளை, கப்பலின் தீ விபத்தை அடுத்து கடலில் கலந்த பிளாஸ்டிக் மற்றும் இரசாயனப் பொருட்கள் என கரையொதுங்கிய 300 தொன் கழிவுகள் இதுவரை சேகரிக்கப்பட்டுள்ளன என்று விமானப்படை தெரிவித்துள்ளது.
அதேபோல, கொழும்புத் துறைமுகத்துக்கு அருகே தீக்கிரையாகி, தற்போது கடலில் மூழ்கிக் கொண்டிருக்கும் கப்பல், இலங்கை கடல் எல்லைக்குள் பிரவேசித்த விதம் தொடர்பாக முறையான விசாரணைகளை மேற்கொள்ளும்படி மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இது குறித்த முழுமையான விசாரணையொன்றுக்கு சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு உத்தரவிடுமாறு குறிப்பிட்டு உயர்நீதிமன்றத்தில் அடிப்படைய உரிமை மனுவும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.