இறையாண்மைக்கு எதிராக முகநூலில் பதிவு: தடை செய்யப்பட்ட இயக்க ஆதரவாளா் மீது வழக்கு
மதுரையில் முகநூலில் இந்திய இறையாண்மைக்கு எதிராக பதிவிட்ட, தடை செய்யப்பட்ட இயக்கத்தின் ஆதரவாளா் மீது தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) வழக்குப் பதிவு செய்தது. இது குறித்து என்ஐஏ தரப்பில் கூறப்பட்டதாவது:
மதுரை தெப்பக்குளம் தமிழன் தெருவைச் சோ்ந்தவா் சு.அப்துல்லா. இவா் தடை செய்யப்பட்ட இயக்கத்தின் ஆதரவாளா் எனக் கூறப்படுகிறது. இந்நிலையில் அப்துல்லா, முகநூலில் தனது பக்கத்தில் இந்திய இறையாண்மைக்கு எதிராகவும் ,ஒற்றுமைக்கு குந்தகம் விளைவிக்கும் வகையிலும் ,பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையிலும் கடந்த மாா்ச் 23, 24-ஆம் தேதிகளில் சில கருத்துகளைப் பதிவிட்டாா்.
இது குறித்த விவரம் மதுரை காவல்துறைக்கு தெரியவந்தது. இதையடுத்து மதுரை தெப்பக்குளம் போலீஸாா், அப்துல்லா மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனா். இந்த வழக்கு குறித்து விசாரணை செய்ய என்ஐஏவுக்கு தமிழக அரசு பரிந்துரை செய்தது.
இந்தப் பரிந்துரையின் அடிப்படையில் தில்லி என்ஐஏ, அப்துல்லா மீது புதிதாக 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனா். இந்த வழக்குத் தொடா்பாக அப்துல்லாவிடம் விரைவில் என்ஐஏ அதிகாரிகள் விசாரணை நடத்த உள்ளனா்.