சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை மருத்துவமனையாக மாற்றிய எம்.எல்.ஏ.: பொதுமக்கள் பாராட்டு!

தனது சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை அரசு மருத்துவமனையாக மாற்றிய விளாத்திகுளம் எம்.எல்.ஏ.வுக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை காரணமாக அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பிற மாநிலங்களை போல் தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் அதிகமாகவே உள்ளது. தினசரி பாதிப்பு 30 ஆயிரத்தை கடந்ததோடு, பலி எண்ணிக்கையும் 450க்கும் மேல் பதிவானது. அதிகமானோர் பாதிக்கப்படுவதால் சிகிச்சை அளிக்க போதிய மருத்துவமனைகள், ஆக்சிஜன் படுக்கைகள் போன்றவை கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டது. தற்போது தமிழகத்தில் கொரோனா பாதிப்பு சற்று கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. தினசரி பாதிப்பு 20 ஆயிரமாக குறைந்துள்ளது.

தொற்று பாதிப்பு குறைந்துள்ளபோதிலும், மருத்துவ வசதி பொதுமக்களுக்கு கிடைக்க வேண்டும் என தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. போதுமான படுக்கைகள் கிடைப்பதற்கும், அனைவருக்கும் மருத்து வசதி கிடைக்க வேண்டும் என்பதற்காக பல்வேறு இடங்களில் சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அந்த வகையில் தங்கள் பகுதியில் உள்ள பொது மக்களுக்கு எளிதில் மருத்துவ வசதி கிடைக்க வேண்டு;ம் என்பதற்காக தனது சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தினை அரசு மருத்துவமனையாக மாற்றியுள்ளார் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் ஜி.வி.மார்க்கண்டேயன்.

ஏற்கனவே விளாத்திகுளத்தில் 30படுக்கை வசதிகளுடன் அரசு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. விளாத்திகுளம் சுற்றுவட்டார பகுதியில் உள்ள மக்கள் அதில் பயன்பெற்று வருகின்றனர். கொரோனா காலத்தில் மக்கள் கூட்டத்தினை தவிர்க்கும் வகையில் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் ஜி.வி.மார்க்கண்டேயன் தனது சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தினை அரசு மருத்துவமனையாக மாற்றியுள்ளார்.

தினமும் காலை 9 மணி முதல் மாலை 6 மணி செயல்படும் இந்த மருத்துவமனையில் ஒரு மருத்துவர், ஒரு செவிலியர் பணியில் இருப்பார்கள். ஒரு படுக்கை வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.சளி பரிசோதனை, கொரோனா தடுப்பு ஊசி போடுவது, சர்க்கரை, உயர் ரத்த அழுத்த பரிசோதனை போன்றவை இந்த மருத்துவமனையில் செய்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

விளாத்திகுளம் கலைஞர் அரசு மருத்துவமனை என்று பெயர் சூட்டப்பட்டுள்ள இந்த மருத்துவமனையை தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் தமிழக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், மாவட்ட ஆட்சியர் மருத்துவர் செந்தில்ராஜ், சட்டமன்ற உறுப்பினர் ஜி.வி.மார்க்கண்டேயன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மாவட்டத்தில் ஏற்கனவே உள்ள மருத்துவமனையுடன் இந்த மருத்துவமனையும் கூடுதலாக செயல்படுவதால் மக்கள் கூட்டம் தவிர்க்கப்படும் என்றும் எளிதில் சிகிச்சை மேற்கொள்ள முடியும் என்றும் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.