ஞாயிற்றுக்கிழமையில் முதல்வர் ஸ்டாலினை தொந்தரவு செய்யக்கூடாது – வழக்கு போட்டவருக்கு அபராதம் விதித்த நீதிமன்றம்

சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் விவேகானந்தன் தாக்கல் செய்துள்ள மனுவில், கொரனோ இரண்டாவது அலையின் தாக்கம் உச்சத்தில் இருந்தாலும், பரவலை கட்டுபடுத்த தமிழக முதல்வர் ஸ்டாலின் சளைக்காமல் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும், தொடர்ச்சியாக ஆய்வுக்கூட்டங்களை நடத்துவது, சுற்றுப்பயணம் செல்வது என சுழன்று கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளார்.
மேலும், தமிழக முதல்வர் தன்னுடைய உடல்நலனையும் கவனித்தில் கொள்ளாமல், கடந்த மே 30ம் தேதி ஞாயிற்று கிழமை கோவையில் உள்ள ஈ.எஸ்.ஐ மருத்துவமனையை ஆய்வு செய்வதற்காக முழுக்கவச உடையணிந்து கொரனோ வார்டிற்கு சென்றதையும் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
தமிழக மக்களின் நலனில் முதல்வருக்கு அக்கறை உள்ளதுபோல, முதல்வர் மு.க.ஸ்டாலின் நலனிலும் அனைவருக்கும் அக்கறை இருப்பதாகவும் மனுவில் தெரிவித்துள்ளார்.
எனவே தமிழக முதல்வரை அசாதாரண சூழ்நிலைகளை தவிர ஞாயிற்றுக் கிழமைகளில் தொந்தரவு செய்யக்கூடாது என தலைமை செயலாளர், டிஜிபி மற்றும் சென்னை மாநகர காவல் ஆணையர் ஆகியோருக்கு உத்தரவிடக்கோரி மனுவில் கோரிக்கை வைத்திருந்தார்.
இந்த மனு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, அதிகாரிகள் எவ்வாறு செயல்பட வேண்டுமென உத்தரவிட முடியாது எனக்கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டதுடன், அபத்தாமாக தொடரப்பட்ட வழக்கு என கூறி மனுதாரருக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தும் உத்தரவிட்டனர். மேலும், நீதிமன்றத்தில் அனுமதி பெறாமல் ஓராண்டிற்கு பொதுநல வழக்கு தொடர தடைவிதித்தும் உத்தரவிட்டார்.