கத்தி முனையில் 6 பேரால் கூட்டு பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட 12ம் வகுப்பு மாணவி!
12ம் வகுப்பு மாணவியை கத்தி முனையில் பாலியல் வன்புணர்வு செய்த நபர்களில் இருவரை, அதிரடியாக துப்பாக்கி முனையில் சுட்டுப் பிடித்துள்ளனர் காவல்துறையினர்.
உத்தரப்பிரதேச மாநிலம் பரேலியைச் சேர்ந்த அந்த 19 12ம் வகுப்பு மாணவி (வயது 19) கடந்த மே 31ம் தேதி பக்வான்பூர் திம்ரி பகுதியை நோக்கி தனது ஆண் நண்பர்கள் இருவருடன், ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்த போது, அவர்களை வழிமறித்த 5 இளைஞர்கள் அவர்களிடம் தகராறில் ஈடுபட்டிருக்கின்றனர்.
மாணவி உட்பட மூவரும் ஸ்கூட்டரில் இருந்து இறங்கிய போது அவர்களை தாக்கி அதனை வீடியோவாக எடுத்திருக்கின்றனர். மாணவியின் நண்பர் ஒருவர் தன்னுடைய மொபைலில் குடும்பத்தினரை தொடர்பு கொண்டு உதவி கேட்க முயன்ற போது அவரை சரமாறியாக தாக்கியிருக்கின்றனர். மாணவியின் ஆண் நண்பர்கள் இருவரையும், அந்த இளைஞர்கள் பலமாக தாக்கியதில் ஒருவர் மயக்க நிலைக்கு சென்றுவிட, மற்றொரு நண்பர் ஸ்கூட்டரில் அங்கிருந்து தப்பியோடியுள்ளார்.
அருகே பைக்கின் நின்று கொண்டிருந்த மற்றொரு நபரை அழைத்த அந்த இளைஞர்கள் அந்த மாணவியை அங்கிருந்த வாய்க்கால் பகுதிக்கு தூக்கிச் சென்று கத்தி முனையில் கூட்டுப் பாலியல் வன்புணர்வு செய்துள்ளனர். மேலும் இது குறித்து யாரிடமும் சொல்லக்கூடாது அவரை மிரட்டிவிட்டு அங்கிருந்து தப்பியிருக்கின்றனர்.
இதனையடுத்து வீடு திரும்பிய அந்த மாணவி இது குறித்து யாரிடமும் சொல்லாமல் சில நாட்கள் வேதனையுடன் தவித்து வந்துள்ளார். இருப்பினும் மாணவியின் நிலையை உணர்ந்த அவருடைய பெற்றோர் விசாரித்த போது நடந்தவற்றை அந்த மாணவி கூறியிருக்கிறார்.
இந்நிலையில் கடந்த ஜூன் 5ம் தேதி இசாத்நகர் காவல்நிலையத்திற்கு மாணவியை அழைத்துச் சென்ற அவருடைய பெற்றோர், கூட்டுப் பாலியல் வன்புணர்வு செய்ததாக 6 பேர் மீது புகார் அளித்துள்ளனர். புகாரையடுத்து மருத்துவ சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு மாணவியை அனுப்பி வைத்துள்ளனர். பின்னர் குற்றத்தில் தொடர்புடையவர்களை பிடிப்பதற்காக காவல் குழுக்களையும் அமைத்து தேடி வந்தனர்.
மாணவி கூட்டுப் பாலியல் வன்புணர்வில் தொடர்புடைய இருவரை நேற்று கைது செய்ய முயன்ற போது பதுங்கியிருந்த அவர்கள் காவல்துறையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர், இதைத் தொடர்ந்து காவல்துறையினரும் துப்பாக்கியால் திருப்பிச் சுட்டனர்.
காவல்துறையினர் சுட்டதில் குண்டு காயங்களுடன் போராடிய விஷால் பட்டேல் (வயது 22) மற்றும் அனுஜ் பட்டேல் (வயது 23) ஆகிய இருவரை கைது செய்து சிறையில் அடைத்திருக்கின்றனர்.
மேலும், தலைமறைவாக இருந்து வரும் தர்மேந்திரா, அமித், நரேஷ் மற்றும் நீரஜ் ஆகிய நால்வரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருவதாக காவல் கண்காணிப்பாளர் சிங் சஜ்வான் தெரிவித்தார்.