சர்ச்சைக்குரிய வரைவு சட்டத்தை கண்டித்து நீருக்கு அடியில் போராட்டம்!
லட்சத்தீவு வரைவு சட்டங்களை கண்டித்து பொதுமக்கள் 12 மணி நேர போராட்டத்தில் ஈடுபட்டனர். சிலர் தண்ணீருக்குள் மூழ்கியபடி தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர்.
கேரளக் கரையில் இருந்து 200 கிலோமீட்டர் தொலைவில், அரபிக்கடலில் அமைந்திருக்கிறது லட்சத்தீவு. மிகச்சிறிய இந்திய யூனியன் பிரதேசமான இங்கு சுமார் 65000 பேர் மட்டுமே வசிக்கின்றனர். லட்சத்தீவுகளின் நிர்வாகியாக இருந்த தினேஷ்வர் சர்மா 2020ஆம் ஆண்டு டிசம்பரில் காலமானர். ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகளை நிர்வாகிகளாக நியமித்து வந்த நிலையில் முதல்முறையாக ஓர் அரசியல்வாதி கையில் லட்சத்தீவுகளின் ஆட்சி நிர்வாகத்தை ஒப்படைத்தது மத்திய அரசு. குஜராத் உள்துறை அமைச்சராக இருந்தவரும் டாமன் – டையூ நிர்வாகத்தை கவனித்து வருபவருமான பிரஃபுல் படேல் லட்சத்தீவின் பொறுப்பு நிர்வாகியாக நியமிக்கப்பட்டார்.
இதையடுத்து நிர்வாக சீர்திருத்தம் என்ற பெயரில் அவர் மேற்கொண்டுவரும் நடவடிகைகள் அனைத்தும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. லட்சத்தீவுகளின் முந்தைய நிலவுரிமை சட்டப்படி, லட்சத்தீவை பூர்வீகமாக கொண்ட தாய், தந்தையருக்கு பிறந்தவர்கள் மட்டுமே அங்கு நிலம் வாங்க முடியும் என்ற விதி தளர்த்தப்பட்டு, தற்போது யார் வேண்டுமானாலும் இடம் வாங்க வழிவகை செய்யும் பிரஃபுல் படேலின் உத்தரவு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் இந்த தீவில், மாட்டிறைச்சிக்கு தடை விதித்ததோடு, மதுபான விற்பனைக்கு அனுமதி அளித்ததும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடலில் மீன் பிடிக்க செல்லும் மீனவர்களை கண்காணிக்க படகுகளில் அரசு அதிகாரி ஒருவரும் செல்ல வேண்டும், உளவு தகவல்கள், பாதுகாப்பு காரணங்களுக்காக செல்ல வேண்டும் என்று பிரஃபுல் படேல் அறிவித்தார்.
இதையடுத்து, லட்சத்தீவின் நிர்வாகியான பிரஃபுல் படேலின் நடவடிக்கைகளை கண்டித்தும் அவரை திரும்பபெற வலியுறுத்தியும் உள்ளூர் மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். #SaveLakshadweep என்ற ஹேஷ்டேக் மூலம் பலரும் லட்சத்தீவுக்கு தங்களது ஆதரவுகளை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், பிரஃபுல் படேலை திரும்பப் பெறக் கோரி அங்குள்ள மக்கள் 12 மணி நேர உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். வீடுகளிலும், கடற்கரைகளிலும் எதிர்ப்பு பதாகைகளை கைகளில் ஏந்தியபடி அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இளைஞர்களில் சிலர் Save Lakshadweep என எழுதப்பட்ட துண்டு பிரசுரங்களை கைகளில் ஏந்தியபடி கடல் நீரில் மூழ்கி தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர்.