மத்திய அரசு இறுதி வாய்ப்பு அளித்ததை அடுத்து, முடிவை மாற்றிய டுவிட்டர்!
புதிய சட்ட விதிகளுக்கு ஒத்துழைக்க அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருவதாக டுவிட்டர் நிறுவனம் அறிவித்துள்ளது.
சமூக வலைத்தளங்களில் போலி செய்திகள் பரப்பப்படுவதை தடுக்கவும், இந்திய இறையாண்மைக்கு எதிரான கருத்துக்கள் பகிர்வதை தடுக்கும் நோக்கிலும் சமூக ஊடகங்கள் மற்றும் ஓடிடி தளங்களுக்கு புதிய வழிகாட்டு விதிகளை மத்திய அரசு கொண்டுவந்தது.
டுவிட்டர், பேஸ்புக், வாட்ஸ் அப் போன்ற சமூக ஊடக நிறுவனங்கள் ஒவ்வொன்றும் இந்தியாவில் தனியாக குறை தீர்ப்பு அதிகாரி ஒருவரை நியமனம் செய்ய வேண்டும் போன்ற புதிய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப விதிகளை கடந்த பிப்ரவரி மாதம் அமல்படுத்திய மத்திய அரசு, அதிகாரியின் பெயர், தொடர்பு முகவரி போன்ற தகவல்களை மத்திய அரசிடம் தெரிவிக்க வேண்டும் எனவும் இதற்கென காலக்கெடுவையும் நிர்ணயித்தது.
இந்த புதிய விதிகள் கருத்து சுதந்திரத்திற்கு எதிரானது எனக் கூறி மத்திய அரசுடன் மோதல் போக்கை கையாண்டது டுவிட்டர் நிறுவனம்.
இதற்கிடையே மத்திய அரசு நிர்ணயித்த காலக்கெடு கடந்த மே மாதம் 26ம் தேதியுடன் நிறைவடைந்த நிலையில், பேஸ்புக், வாட்ஸ் அப், கூகுள் போன்ற நிறுவனங்கள் மத்திய அரசின் புதிய சட்ட விதிகளை ஏற்பதாக அறிவித்தன. ஆனால் டுவிட்டர் நிறுவனம் தொடர்ந்து காலதாமதம் செய்து வந்தது. இதனையடுத்து டுவிட்டர் நிறுவனத்திற்கு நினைவூட்டல் நோட்டீஸ்களை மத்திய அரசு அனுப்பிய நிலையில், இறுதியாக வாய்ப்பு வழங்கும் விதமாக நோட்டீஸ் ஒன்றையும் அனுப்பியது.
இந்நிலையில் மத்திய அரசின் புதிய தகவல் தொழில்நுட்ப விதிகளை ஏற்றுக்கொள்வதாக ட்விட்டர் நிறுவனம் கூறியுள்ளது. மத்திய அரசு இறுதி வாய்ப்பு அளித்ததை அடுத்து, டிவிட்டரின் முடிவில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. அதே நேரத்தில் புதிய விதிகளை நடைமுறைப்படுத்த கூடுதல் கால அவகாசத்தை மத்திய அரசிடம் ட்விட்டர் நிறுவனம் கேட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.
தற்போது கொரோனா பெருந்தொற்று காலம் என்பதால் புதிதாக அதிகாரிகளை பணியமர்த்த காலம் தேவை எனவும் மத்திய அரசிற்கு ட்விட்டர் நிறுவனம் தகவல் தெரிவித்திருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.
புதிய வழிகாட்டுதல்களுக்கு இணங்க ட்விட்டர் எல்லா முயற்சிகளையும் மேற்கொண்டு வருவதாக நாங்கள் இந்திய அரசுக்கு உறுதியளித்துள்ளோம், மேலும் எங்கள் முன்னேற்றம் குறித்த ஒரு கண்ணோட்டம் முறையாக பகிரப்பட்டுள்ளது என்று ட்விட்டர் தரப்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.