யாழ்ப்பாணத்துக்கு அடுத்த கட்டத் தடுப்பூசி இப்போதைக்கு இல்லை! சுகாதார அமைச்சு அறிவிப்பு.
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இரண்டாம் கட்டத்துக்குரிய தடுப்பூசிகள் இந்த வாரம் அல்லது இப்போதைக்கு வழங்கப்பட மாட்டாது என்று சுகாதார அமைச்சு வடக்கு மாகாண சுகாதாரத் திணைக்களத்திற்குத் திடீரென அறிவித்துள்ளது.
சீனாவிலிருந்து கொழும்புக்கு நாளை 9ஆம் திகதி வரும் 10 இலட்சம் தடுப்பூசிகளும், இரண்டாவது டோஸ் ஏற்றுவதற்குப் பயன்படுத்தப்படவுள்ளதாலேயே இந்த முடிவு எட்டப்பட்டுள்ளது எனத் தெரியவருகின்றது.
யாழ்ப்பாணம் மாவட்டத்துக்கு கடந்த மாதம் 29ஆம் திகதி 50 ஆயிரம் சினோபார்ம் தடுப்பூசிகள் அனுப்பி வைக்கப்பட்டன. அவை மறுநாள் 30ஆம் திகதியிலிருந்து ஏற்றப்பட்டன. மூன்று நாள்களில் அவை ஏற்றி முடிக்கப்பட்டிருந்த நிலையில் இரண்டாம் கட்டத் தடுப்பூசிகள் விரைவில் வழங்கப்படும் என்று கொரோனாக் கட்டுப்பாட்டுச் செயலணியின் தலைவரும் இராணுவத் தளபதியுமான சவேந்திர சில்வா தெரிவித்திருந்தார்.
இலங்கைக்கு இந்த மாதம் முதல் வாரத்தில் 20 இலட்சம் சினோபார்ம் தடுப்பூசிகள் கிடைக்கப்பெறும் நிலையில் அவற்றில் யாழ்ப்பாணம் மாவட்டத்துக்கு இரண்டாம் கட்டத்துக்கு வழங்கப்படும் என்று முன்னர் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இரண்டாம் கட்டத் தடுப்பூசிகள் யாழ்ப்பாணம் மாவட்டத்துக்கு கிடைக்கப்பெற்றதும் அதனை ஏற்றுவதற்குரிய ஒழுங்குகள் தொடர்பில் ஆராயும் கூட்டம் வடக்கு மாகாண சுகாதாரத் திணைக்களத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோதே, இரண்டாம் கட்டத் தடுப்பூசிகள் இந்த வாரமோ அல்லது இப்போதைக்கு வழங்கப்பட மாட்டாது என்ற விடயம் சுகாதார அமைச்சு அதிகாரிகளால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ள தடுப்பூசித் திட்டத்துக்கு அமைவாக 14 இலட்சம் பேர் சினோபார்மின் முதலாவது டோஸைப் பெற்றுள்ளனர். அவர்களுக்கு இரண்டாவது டோஸ் ஏற்றுவதற்கே இலங்கைக்கு நாளை வரும் 10 இலட்சம் தடுப்பூசிகள் பயன்படுத்தப்படவுள்ளன. அதேபோன்று நேற்றுமுன்தினம் வந்த 10 இலட்சம் சினோபார்ம் தடுப்பூசிகளிலும் 4 இலட்சம் தடுப்பூசிகள் அதற்காக ஒதுக்கப்பட்டுள்ளன என்று கூறப்படுகின்றது.