சமூக வலைத்தளங்களைக் கண்காணிப்பதால் நேர்மையான ஊடகவியலாளர்களுக்குப் பாதிப்பு இல்லை!
இலங்கையில் போலிச் செய்திகளை வெளியிடும் சமூக வலைத்தளங்களைக் கண்காணிக்கும் தீர்மானம், நேர்மையாகச் செயற்படும் ஊடகவியலாளர்களைப் எந்த வகையிலும் பாதிக்காது என்று அமைச்சரவைப் பேச்சாளரான அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல இன்று தெரிவித்தார்.
சமூக வலைத்தளங்களைக் கண்காணிப்பதற்காக விசேட குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளமை தொடர்பாக ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
நாட்டில் உரிமையாளர்கள் யார் என்று உறுதிப்படுத்தப்படாத மற்றும் நல்லிணக்கத்தைப் பாதிக்கும் வகையில் 17 வீதமான சமூக வலைத்தளங்கள் இயங்குவது கண்டறியப்பட்டுள்ளது எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
சமூக வலைத்தளங்களை ஒழுங்குபடுத்துவது தொடர்பாக மூன்று வாரங்களுக்கு முன்னர் அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
போலிச் செய்திகளை வெளியிடும் சமூக வலைத்தளக் கணக்குகள் நேர்மையாகச் செயற்படும் ஊடகவியலாளர்களைப் பாதிக்கின்றது எனவும் அமைச்சரவைப் பேச்சாளர் மேலும் குறிப்பிட்டார்.