மக்களைப் பாதாளத்தில் தள்ளியுள்ளது இந்த அரசு! – சார்ள்ஸ் எம்.பி. குற்றச்சாட்டு
அரசின் பயணத் தடையால் கிடைத்த பலன் என்னவெனில், மக்களைப் பாதாளத்தில் தள்ளியது மட்டுமே என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் குற்றஞ்சாட்டினார்.
பாராளுமன்றத்தில் இன்று நடைபெற்ற நாட்டின் தற்போதைய நெருக்கடி நிலை குறித்த விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“கொரோனாத் தடுப்பூசிகள் மூலம் மேற்குலக நாடுகள் கொரோனாத் தொற்றைக் கட்டுப்படுத்தியுள்ளன. ஆனால், இலங்கையால் இந்தக் கொரோனாத் தடுப்பூசிகளைக் கொள்வனவு செய்ய முடியாமைக்கு அரசின் இராஜதந்திர கொள்கையின் பலவீனமே காரணமாகவுள்ளது.
இந்தியா, அமெரிக்கா, பிரிட்டனை எதிர்த்து சீனாவின் பக்கம் இலங்கை நிற்பதால் கொரோனாத் தடுப்பூசிகளை இந்த நாடுகள் இலங்கைக்கு வழங்கப் பின்னடிக்கின்றன. முதலில் தடுப்பூசிகளை வழங்கிய இந்தியா தற்போது வழங்க மறுத்துவிட்டது.
கொழும்புத் துறைமுகக் கடல் பரப்பில் கப்பல் ஒன்று தீப்பிடித்து எரிந்தபோது இலங்கை இந்தியாவின் உதவியைக் கேட்டது. ஆனால், இந்தியா முழு மனதுடன் உதவவில்லை. இந்தியா நினைத்திருந்தால் அந்தக் கப்பலின் தீயைக் கட்டுப்படுத்தியிருக்க முடியும்.
இலங்கையின் வெளியுறவுக் கொள்கையின் தவறே இந்தியா இவ்வாறு வேண்டா வெறுப்பாக செயற்படக் காரணம்” – என்றார்.