6 இலட்சம் அஸ்ட்ராசெனகா டோஸ் தடுப்பூசிகளை ஜப்பான் வழங்கவுள்ளது
ஆறு இலட்சம் அஸ்ட்ராசெனகா தடுப்பூசிகளைப் பெற்றுத்தருமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, ஜப்பான் பிரதமர் யொசிஹிடே சுகா (Yoshihide Suga) அவர்களிடம் முன்வைத்த கோரிக்கைக்கு சாதகமான பதில் கிடைக்கப்பெற்றுள்ளதாக, ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் சுகியாமா அக்கிரா (Sugiyama Akira) இற்குமிடையில், இன்று (09) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற சந்திப்பின்போதே இதுபற்றி தெரிவிக்கப்பட்டது.
கொவிட் வைரஸ் தொற்றொழிப்பு, மருத்துவ மற்றும் சுகாதாரப் பாதுகாப்பு உபகரணங்களைப் பெற்றுக்கொள்வது தொடர்பில் ஜனாதிபதி முன்வைத்த கோரிக்கைக்கு ஜப்பான் அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளது.
சமுத்திர அனர்த்தம் தொடர்பில் விரைவாகப் பதில செயற்பாடுகளை முன்னெடுப்பதற்குத் தேவையான தொழிநுட்ப உதவிகளைப் பெற்றுக்கொள்வது தொடர்பிலும் ஜனாதிபதி, ஜப்பான் தூதுவரின் கவனத்துக்குக் கொண்டு வந்தார்.
ஜப்பான் தூதுவர் அலுவலகத்தின் பிரதித் தூதுவர் கித்தமுரா டொசிகிரோ (Kitamura Toshihiro), முதலாவது செயலாளர் இமமுரா காயோ (Imamura Kayo), ஜனாதிபதியின் செயலாளர் பி.பீ. ஜயசுந்தர, ஜனாதிபதியின் தலைமை ஆலோசகர் லலித் வீரதுங்க மற்றும் வெளிநாட்டு அமைச்சின் செயலாளர் அட்மிரல் ஜயநாத் கொலம்பகே ஆகியோரும் இச்சந்திப்பின்போது கலந்துகொண்டிருந்தனர்.