ஆக்சிஜன் சப்ளையை நிறுத்தி ஒத்திகை பார்த்த ஆக்ரா மருத்துவமனை: விசாரணை கோரும் சொந்தங்களை இழந்த உறவினர்கள்
ஏப்ரல் 27ம் தேதி ஸ்ரீ பராஸ் மருத்துவமனையில் 5 நிமிடங்களுக்கு ஆக்சிஜன் சப்ளை நிறுத்தப்பட்டது. அதாவது எந்த நோயாளி பிழைக்கின்றனர், யார் தாங்குகின்றனர் என்பதைப் பார்ப்பதற்காக என்று கூறப்பட்டது. இதன் மூலம் ஆக்சிஜன் பற்றாக்குறையை சரியாகக் கையாள முடியும் என்று காரணம் கூறப்பட்டது, காரணம் கூறியவர் மருத்துவமனை உரிமையாளர்.
22 நோயாளிகள் பலியாக 74 பேர் பிழைத்தனர். பராஸ் மருத்துவமனை உரிமையாளர் அரிஞ்ஜய் ஜெயின் வீடியோவில் மேற்கண்டவாறு பேசியது சமூக ஊடகங்களில் கண்டனங்களுடன் வெளிவந்தது. இதனையடுத்து உரிமையாளர் மீது மாவட்ட மேஜிஸ்ட்ரேட் வழக்குப் பதிவு செய்தார். மருத்துவமனை சீல் வைக்கப்பட்டது உரிமம் ரத்து செய்யப்பட்டது.
ஆனால் மாவட்ட மேஜிஸ்ட்ரேட் சொல்லப்பட்ட தேதிகளான ஏப்ரல் 26, 27 தேதிகளில் மரணம் நிகழவில்லை என்று கூறியுள்ளார். ஏப்ரல் 26, 27 தேதிகளில் 7 நோயாளிகள் இறந்ததாக நிர்வாகம் கூறியது. 22 பேர் மரணம் என்பதை மறுத்தது.
ஹெட் கான்ஸ்டபிள் அசோக் சிங்கின் மனைவியும் ஆக்சிஜன் ஒத்திகையில் மரணமடைந்தார். அசோக் சிங் இது பற்றி கூறும்போது, “இது வேண்டுமென்றே செய்யப்பட்ட செயல், மருத்துவமனை உரிமையாளரைக் கைது செய்ய வேண்டும். எங்களுக்கு நீதி வேண்டும், ஆக்சிஜன் பற்றாக்குறை இல்லையெனில் ஏன் எங்களை அன்று அதிகாலை 5 மணிக்கு அழைக்க வேண்டும்? நோயாளிகளை வேறு மருத்துவமனைக்கு கூட்டிச்செல்லுமாறு கூற வேண்டும்?” என்று கேள்வி எழுப்பினார்.
விஷால் ஷர்மா என்ற பத்திரிகையாளரின் தாயார் இதே மருத்துவமனையில் கோவிட்-19-க்கு இறந்தார். ஆனால் இவர் மருத்துவர்கள் மீது குற்றம் சுமத்தவில்லை மாறாக விதி வலியது என்றே நம்பினார், ஆனால் இந்த ஒத்திகை விவகாரம் அம்பலமானவுடன் இவரும் ஏதோ தவறு நடந்திருக்கிற்து என்று நம்பத் தொடங்கினார்.
மேலும் தன் தாய் இறந்த அன்று பொதுவாக சிசிடிவி கேமராவில் நோயாளிகளை காட்டுபவர்கள் அன்று காட்டவே இல்லை என்ற பத்திரிகையாளர் விஷால் ஷர்மா, மருத்துவமனைக்கு எதிரான எஃப்.ஐ.ஆர். ஒரு கண் துடைப்பு என்றார். மேலும் தன் தாயார் இறந்ததை மருத்துவமனை தெரிவிக்கவில்லை, இறந்தோர் உடல்களை வெளியே கொண்டு வரும்போது தானாகவே தான் தெரிந்து கொண்டதாகக் கூறினார்.
இந்நிலையில் ஒத்திகையினால் உறவினர் உயிரைப் பறிகொடுத்தவர்கள் முழு விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையை வலுவாக்கியுள்ளனர்.