ஓபிஎஸ் ஆதரவு போஸ்டருக்கு பதிலடியாக இபிஎஸ் ஆதரவு போஸ்டர்… நெல்லையில் போட்டா போட்டி
சட்டமன்ற தேர்தல் தோல்விக்குப் பிறகு அதிமுகவில் உட்கட்சி பூசல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் இணைந்து அறிக்கைகள் வெளியிட்டு வந்த நிலையில் தற்போது ஓபிஎஸ் தனியாகவும் அறிக்கைகள் வெளியிடுகிறார். இந்த நிலையில் ஓ.பன்னீர்செல்வத்தை ஆதரித்து எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக திருநெல்வேலி நகர் பகுதியில் பல்வேறு இடங்களில் நேற்று போஸ்டர் ஒட்டப்பட்டிருந்தது.
பன்னீர்செல்வத்தை கலந்தாலோசிக்காமல் எவ்வித நடவடிக்கைகளும் எடுக்க கூடாது. அவரை கலந்தாலோசிக்காமல் எடுக்கப்பட்ட முடிவுகளின் காரணமாகவே சட்டமன்ற தேர்தலில் தோல்வியை சந்திக்க நேரிட்டது. எதிர்காலங்களில் அதுபோன்று முடிவுகள் எடுக்கப்பட்டால் தலைமை கழகத்தை முற்றுகையிடுவோம் என மானூர் ஒன்றிய அதிமுக தொண்டர்கள் போஸ்டர் அடித்து ஒட்டி இருந்தனர்.
இந்த நிலையில் அதற்கு பதிலளிக்கும் விதமாக நெல்லை நகரம் முழுவதும் முன்னாள் நிர்வாகிகள் சார்பில் போஸ்டர் அடித்து ஒட்டப்பட்டுள்ளது. அதில் எடப்பாடி பழனிச்சாமியை எதிர்க்கட்சித் தலைவராக தேர்ந்தெடுத்த அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களுக்கு நன்றி என்ற வாசகம் இடம் பெற்றுள்ளது. எடப்பாடி பழனிச்சாமி, ஓ பன்னீர்செல்வம் ஆகிய இருவரின் படமும் இதில் இடம்பெற்றிருந்தாலும் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாகவே இந்த போஸ்டர் ஒட்டப்பட்டு உள்ளதாக தெரிகிறது.
நேற்று ஒட்டப்பட்டிருந்த போஸ்டருக்கு பதில் அளிக்கும் விதமாக இந்த போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது என்ற எண்ணத்தை கட்சியின் தொண்டர்களிடையே ஏற்படுத்தியுள்ளது. இதனால் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ பன்னீர்செல்வம் இடையேயான உரசல் கடைக்கோடி தொண்டர்கள் வரை தெரிய துவங்கி உள்ளதையே இது காட்டுகிறது.