முதல்வர் ஸ்டாலினின் மோடி எதிர்ப்பு அரசியல்: அரசுக்கு என்ன மாதிரியான விளைவை ஏற்படுத்தும்?
மோடி எதிர்ப்பு அரசியலை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கையில் எடுத்துள்ள நிலையில், தமிழ்நாடு அரசுக்கு என்ன மாதிரியான விளைவை ஏற்படுத்தும்? மத்திய அரசை நிர்பந்தித்து சலுகைகள், திட்டங்களை பெற உதவுமா? அடுத்தடுத்த நடவடிக்கைகள் தமிழ்நாடு அரசுக்கு பலனளிக்குமா? நெருக்கடி தருமா? சற்று விரிவாக பார்க்கலாம்..
மத்திய அரசை, ஒன்றிய அரசு என்று அழைக்க தொடங்கியது முதல் ஜிஎஸ்டி விவகாரம், தடுப்பூசி ஒதுக்கீடு என பல்வேறு விவகாரங்களில் தமிழக அமைச்சர்கள் மத்திய அரசை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். மத்திய அரசின் கொள்கைகளுக்கு எதிராக கடும் விமர்சனங்களை முன் வைக்கும் ஜெயரஞ்சனை மாநில வளர்ச்சி கொள்கை கமிட்டி துணை தலைவராக நியமித்தது, மத்திய அரசு போதிய தடுப்பூசி தரவில்லை என தடுப்பூசி முகாம்களை நிறுத்துவதாக அறிவித்தது, நீட் தேர்வின் பாதிப்பு பற்றி ஆய்வு செய்ய ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் கமிட்டி அமைத்துள்ளது என மத்திய அரசின் செயல்பாடுகளை தமிழக அரசு கேள்வி எழுப்பி வருகிறது.
கொரோனா ஊரடங்கு காரணத்தால் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு கடன்களை திருப்பி செலுத்த கூடுதல் கால அவகாசம் வழங்க வேண்டும் என ஒன்றிய அரசை இணைந்து வலியுறுத்த வேண்டும் என்று 12 மாநில முதல்வர்களுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி, மத்திய அரசின் கவனத்தை ஈர்த்துள்ளார். தமிழக அரசின் பல்வேறு நடவடிக்கைகளுக்கு பா.ஜ.க மாநில தலைவர் எல்.முருகன் நேரடியாக கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பா.ஜ.க செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி கூறுகையில், பா.ஜ.க எதிர்ப்பு மனநிலை தமிழக மக்களிடம் இல்லை எனவும், ஜி.எஸ்.டி பல ஆண்டுகளாக போராடி கொண்டு வரப்பட்டது எனவும், ஆனால் புரிதல் இல்லாமல் திமுக எதிர்கிறது என்று கூறி உள்ளார். அரசியல் காரணத்திற்காக திமுக இவ்வாறு செய்கிறது என்றும், நாளடைவில் இது சரியாகும் எனவும், மத்திய அரசு தமிழகத்திற்கு தேவையான அனைத்து வளர்ச்சி பணிகளையும் செய்யும் என்கிறார் அவர்.
இதற்கு முன் ஆட்சியில் இருந்த அதிமுக அரசு மத்திய அரசுக்கு அடிபணிந்து இருந்ததாகவும், மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி தமிழகத்தின் உரிமைகளை பாதுகாக்கும் ஆட்சியாக இருக்கிறது எனவும், எப்போதெல்லாம் உரிமைக் குரலை எழுப்ப வேண்டுமோ அதை ஸ்டாலின் சரியாக செய்கிறார் என்கிறார் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் கோபண்ணா.
தடுப்பூசி கொள்கையில் மத்திய அரசு தடுமாற்றத்தில் இருந்த நிலையில், தமிழகம் உள்ளிட்ட மற்ற மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்ததன் காரணமாக தற்போது தடுப்பூசி இலவசமாக செலுத்தப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. மாநில அரசின் உரிமைகளை பாதுகாக்க குரல் கொடுப்பது மு.க.ஸ்டாலின் மீது நம்பிக்கை அளிப்பதாகவும் அரசியல் பார்வையாள ர்கள் தெரிவிக்கின்றனர்.