பள்ளிகள் திறப்பு எப்போது? வெளியான உறுதியான தகவல்!
ஒடிசா மாநிலத்தில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் 16ஆம் தேதி முதல் அனைத்து பள்ளிகளும் மூடப்பட்டுள்ளன. இந்த சூழலில் 2020-21ஆம் கல்வியாண்டு முடிவடையும் நேரத்தில் பொதுத்தேர்வு நடத்த வாய்ப்பிருக்கிறதா என்று ஆலோசனை செய்யப்பட்டது. ஆனால் கொரோனா இரண்டாவது அலையின் தொடக்கம் அச்சத்தை ஏற்படுத்தியது. இதன் காரணமாக 9 முதல் 12ஆம் வகுப்பு வரை பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது.
மாநில கொரோனா பாதிப்பு நிலவரம்
இம்மாநிலத்தில் தினசரி புதிய பாதிப்புகள் கடந்த மே 21ஆம் தேதி 12 ஆயிரத்திற்கும் மேல் பதிவாகி உச்சம் தொட்டது. இதையடுத்து பாதிப்புகள் தொடர்ந்து குறைந்து வருகிறது. நேற்று புதிதாக 6,097 பேருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டது. 8,299 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர். 44 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது 66,226 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பள்ளிகள் திறக்கப்படுமா?
மாநிலத்தின் மொத்த கொரோனா பாதிப்பு 8,42,461ஆக உள்ளது. இதில் குணமடைந்த நபர்கள் 7,72,972 ஆகும். பலி எண்ணிக்கை 3,263ஆக இருக்கிறது. இந்நிலையில் கோவிட்-19 பாதிப்பின் இரண்டாவது அலை படிப்படியாக குறைந்து வருகிறது. எனவே பள்ளிகள் திறக்கப்படுமா என்று பெற்றோர்கள் மத்தியில் கேள்வி எழுந்தது. இதுதொடர்பாக பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் சமிர் ரஞ்சன் தாஷ்,
மூன்றாவது அலை எச்சரிக்கை
மாணவர்களின் உடல்நலனே மாநில அரசுக்கு முக்கியம். இதில் ஒருபோதும் சமரசம் செய்து கொள்ள மாட்டோம். ஒவ்வொரு கால இடைவெளியாக வைரஸ் பரவல் குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. இரண்டாவது அலை குறைந்து வருவதால் பள்ளிகள் திறக்கப்பட வாய்ப்பிருப்பதாக தகவல்கள் பரவி வருகின்றன. ஆனால் கொரோனா மூன்றாவது அலை குறித்து எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
எனவே நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருகிறோம். தற்போதைய சூழலில் பள்ளிகள் திறப்பு குறித்து எந்தவொரு முடிவும் எடுக்கப்படவில்லை. இந்த விஷயத்தில் சரியான நேரத்தில் முதல்வர் நவீன் பட்நாயக் அறிவிப்பு வெளியிடுவார் என்று தெரிவித்தார்.