என்எச்பிசி நிறுவனம் ரூ.3233 கோடி லாபம் ஈட்டியது
நாட்டின் முன்னணி நீர்மின்சக்தி நிறுவனமான என்எச்பிசி, 2020-21 -ஆம் நிதியாண்டில், மிக அதிகபட்சமாக ரூ.3233 கோடி லாபம் ஈட்டியுள்ளது.
தேசிய நீர்மின்சக்தி கார்பரேஷன் (என்எச்பிசி) மின்துறை அமைச்சகத்தின் ‘மினி ரத்னா’ பிரிவில் உள்ள இந்நிறுவனமானது, 2020-21-ஆம் நிதியாண்டின் தணிக்கை செய்யப்பட்ட நிதிநிலை முடிவுகளை வெளியிட்டுள்ளது.
அதன்படி, 2020-21 வரி செலுத்தியபின், என்எச்பிசி நிறுவனம் ரூ.3233.37 கோடி நிகர லாபம் ஈட்டியுள்ளது. இதற்கு முந்தைய நிதியாண்டில் ரூ.3007.17 கோடி நிகர லாபம் ஈட்டியது. 2020-21 ரூ.8506.58 கோடியாகவும், இதற்கு முந்தைய நிதியாண்டில் ரூ.8,735.15 கோடி லாபம் ஈட்டியது.
கடந்த 2020-21 முழு நிதியாண்டில் ஒருங்கிணைந்த நிகர லாபம் ரூ.3582.13 கோடி. 2019-20 முழு நிதியாண்டின் நிகர லாபம் ரூ.3,344.91 கோடி. 2020-21 முழு நிதியாண்டின் மொத்த வருமானம் ரூ.10,705.04 கோடி. 2019-20 முழு நிதியாண்டின் மொத்த வருமானம் ரூ.10,776.64 கோடியாக இருந்தது.
கொரோனா பெருந்தொற்றுக்கு இடையிலும், என்எச்பிசி நிறுவனத்தின் மின் நிலையங்கள், 2020-21-ஆம் ஆண்டில் 24,471 மில்லியன் யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்துள்ளன.
கடந்த மார்ச் மாதத்தில் பங்கு ஒன்றுக்கு இடைக்கால ஈவுத் தொகையாக ரூ.1.25 வழங்கியது. தற்போது கூடுதலாக ஒவ்வொரு பங்குக்கும் 35 காசு ஈவுத் தொகை அளிக்க நிறுவனத்தின் இயக்குநர்கள் பரிந்துரை செய்துள்ளனர். மொத்த ஈவுத் தொகையாக 2020-21-ஆம் நிதியாண்டில் ரூ.1607.21 கோடி வழங்கியுள்ளது.
கடந்த 2019-20-ஆம் ஆண்டில் ரூ.1506.76 கோடி ஈவுத் தொகை வழங்கியது. என்எச்பிசி நிறுவனம், தற்போது, சுமார் ஏழு லட்சம் பங்குதாரர்களை வைத்துள்ளது.