இந்தியக் கடலோரப் பாதுகாப்புப் படை வழங்கிய ஒத்துழைப்புக்கு இலங்கை நன்றி தெரிவிப்பு.

இலங்கை கடற்பரப்பில் அண்மையில் தீ விபத்துக்குள்ளான ‘எக்ஸ் – பிரஸ் பேர்ல்’ கப்பலின் அனர்த்தங்களை முகாமைத்துவம் செய்வதற்கு இந்திய கடலோரப் பாதுகாப்புப் படை வழங்கிய ஒத்துழைப்புக்கு பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமால் குணரத்ன கொழும்பில் உள்ள இந்தியத் தூதுவர் கோபால் பக்லேவிடம் நன்றி தெரிவித்தார்.

இந்தியத் தூதுவர் மற்றும் பாதுகாப்புச் செயலாளர் ஆகியோருக்கிடையில் பாதுகாப்பு அமைச்சில் நேற்று நடைபெற்ற சந்திப்பின்போதே பாதுகாப்புச் செயலாளர் இவ்வாறு நன்றி கூறினார்.

மேலும், இரு நாடுகளுக்கிடையில் நீண்டகாலமாக நிலவும் இரு தரப்பு உறவுகள் மற்றும் ஒத்துழைப்புகள் தொடர்பாகவும் பாதுகாப்புச் செயலாளர் இதன்போது நினைவுகூர்ந்தார்.

பாதுகாப்பு ஒத்துழைப்புகள் தொடர்பாக இந்தியத் தூதுக்குழுவுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே பாதுகாப்புச் செயலாளர் இவ்வாறு தெரிவித்தார்.

இந்தக் கலந்துரையாடலின்போது கொரோனாத் தொற்றுநோயைக் கருத்தில்கொண்டு இரு நாடுகளுக்கிடையில் நீண்டகாலமாக நிலவும் இராணுவப் பயிற்சி பரிமாற்றத்தின் சீரான செயற்பாடு தொடர்பாகவும் கவனம் செலுத்தப்பட்டது.

மேலும், இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் தொடர்பாகவும் இந்தக் கலந்துரையாடலின்போது ஆராயப்பட்டன.

அத்தோடு இந்தச் சந்திப்பை நினைவுகூரும் வகையில் பாதுகாப்புச் செயலாளர் மற்றும் இந்தியத் தூதுவர் ஆகியோருக்கிடையில் நினைவுச் சின்னங்களும் பரிமாறிக்கொள்ளப்பட்டன.

கொரோனாத் தொற்றுப் பரவல் தடுப்பு தொடர்பான சுகாதார வழிகாட்டுதலுக்கு அமைய இடம்பெற்ற இந்தக் கலந்துரையாடலில் இலங்கை கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன, விமானப் படைத் தளபதி ஏயார் மார்ஷல் சுதர்ஷன பாத்திரன, தேசிய புலனாய்வுப் பிரதானி மேஜர் ஜெனரல் ருவன் குலதுங்க, பாதுகாப்பு அமைச்சின் இராணுவ அதிகாரி பிரிகேடியர் தினேஷ் நாணயக்கார, மேலதிக செயலாளர் பி.பி.எஸ்.சி. நோனிஸ், இந்தியத் தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கெப்டன் விகாஷ் சூத் மற்றும் அமைச்சின் அதிகாரிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.