பெண்களுக்கு அர்ச்சகர் பயிற்சி வரவேற்க்கத்தக்கது: முறையாக செயல்படுத்தவேண்டும் – வானதி ஸ்ரீனிவாசன்
பெண்களுக்கு அர்ச்சகர் பயிற்சி வழங்கப்படும் என்பது வரவேற்க்கத்தக்கது என்று பா.ஜ.க எம்.எல்.ஏ வானதி ஸ்ரீனிவாசன் தெரிவித்துள்ளார்.
மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க அரசு மே 7-ம் தேதி ஆட்சிப் பொறுப்பேற்றது. ஆட்சிப் பொறுப்பேற்றதிலிருந்து பல்வேறு முக்கிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகின்றன. குறிப்பாக, இந்து சமய அறநிலையத்துறையில் பல்வேறு நடவடிக்கைளும் அறிவிப்புகளும் வந்தவண்ணம் உள்ளன. சென்னை வடபழனி முருகன் கோயிலுக்கு சொந்தமான 250 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலம் மீட்கப்பட்டது. இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான நிலங்கள் குறித்த விவரம் இணையத்தில் பதிவேற்றப்பட்டது. அனைத்து சாதியினரும் அர்ச்சகராவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு தெரிவித்தார். இந்தநிலையில், நேற்று செய்தியாளர்களிடம் பேசிய சேகர் பாபு, ‘தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் தமிழில் அர்ச்சனை செய்யப்படும். அதற்கான பயிற்சியை அரசு தொடர்ந்து வழங்கும். மேலும் பெண்கள் அர்ச்சகராக விரும்பினால் அவர்களுக்கும் தனி பயிற்சி கொடுக்கப்படும்.
கோயில்களில் தமிழில் அர்ச்சனை செய்யும் அர்ச்சகரின் பெயர் மற்றும் தொடர்பு எண் கொண்ட பலகை வைக்கப்படும். எந்தெந்தக் கோயில்களில் அர்ச்சகர் பற்றாக்குறை இருக்கிறதோ, அங்கெல்லாம் உடனே காலியிடங்கள் நிவர்த்தி செய்யப்படும்’ என்று தெரிவித்தார். சேகர் பாபுவின் அறிவிப்புக்கு பல்வேறு தரப்பினரும் வரவேற்பு தெரிவித்துவருகின்றனர்.
இதுதொடர்பாக பா.ஜ.க எம்.ஏல்.ஏ வானதி ஸ்ரீனிவாசன் ட்விட்டர் பதிவில், ‘விஷ்வ ஹிந்து பரிஷத், பல்லாண்டுகளாக அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் பயிற்சி அளித்துக்கொண்டுள்ளது. ஆர்.எஸ்.எஸ் அமைப்பு முழுமையாக இப்பணியில் துணை நிற்கிறது. தீண்டாமை ஒழிப்பை வெற்று முழக்கமல்லாது வாழ்க்கை முறையாகக் கொண்டது சங்க குடும்பம்( Sangh Pariwar). பெண்களுக்கு அர்ச்சகர் பயிற்சி வழங்கப்படும் என்பது வரவேற்கத்தக்கது.
காரைக்காலம்மையார் பெயரில் பயிற்சிப் பள்ளி துவங்கவேண்டும். கோயில் நிர்வாகம், பக்தர்கள் ஒத்துழைப்பு, முறையான பயிற்சி என ஆக்கப்பூர்வமாக முன்னெடுக்க வேண்டும். பெண்கள் அர்ச்சகராக மேல்மருவத்தூர் போன்ற பல்வேறு கோயில்களில் சேவையாற்றிக் கொண்டுள்ளனர். கோவை பேரூர் ஆதீனம் போன்ற பழமையான ஆதீனங்கள் பெண்களுக்கு ஆன்மீக பயிற்சி அளித்து கோயில் நிகழ்வுகளை நடத்த ஊக்கமளிக்கிறார்கள். ஹிந்து மரபில் பெண்களுக்கான ஆன்மீக தளம் பெருமளவு அனுசரணை கொண்டது’ என்று தெரிவித்துள்ளார்.