மூட நம்பிக்கையால் 10 ஆண்டுகள் மூடப்பட்டிருந்த எம்.எல்.ஏ. அலுவலகம் மீண்டும் திறப்பு!
மூடநம்பிக்கையால் கடந்த 10 ஆண்டுகளாக மூடப்பட்டிருந்த கடலூர் சட்டமன்ற அலுவலகம் இன்று திறக்கபட்டு பொதுமக்கள் தங்களது கோரிக்கை மனுக்களை அளித்தனர்.
அதிமுக ஆட்சியல் கடந்த 2011 முதல் 2021 வரை கடலூர் சட்டமன்ற உறுப்பினராக முன்னாள் அமைச்சர் எம்.சி சம்பத் இருந்து வந்தார். அவர் கடலூர் சட்டமன்ற தொகுதி அலுவலகத்திற்கு வந்தால் தனது அமைச்சர் பதவி பறிபோய்விடுமோ என்ற மூடநம்பிக்கையில் கடந்த பத்து வருடமாக சட்டமன்ற அலுவலகத்தற்கு வராமல் இருந்தார். இதனால் சட்டமன்ற உறுப்பினரின் அலுவலகம் பூட்டியே கிடந்தது.
பொதுமக்கள் உபயோகிக்காத அளவுக்கு புதர்மண்டி பாழடைந்து கிடந்தது. இதனால் தங்களது கோரிக்கைகளை நேரடியாக சட்டமன்ற உறுப்பினரிடம் கொடுக்க முடியாமல் கடந்த பத்து வருடமாக கடலூர் பொதுமக்கள் அவதி அடைந்து வந்தனர்.
இந்நிலையில் கடந்த சட்டமன்ற தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்ட ஐயப்பன் தனது தேர்தல் அறிக்கையில் கடலூர் சட்டமன்ற அலுவலகம் திறக்கப்பட்டு பொதுமக்கள் தங்களது குறைகளையும் கோரிக்கை மனுக்களையும் தினந்தோறும் என்னை சந்தித்து அளிக்கலாம் என வாக்குறுதி கொடுத்திருந்தார்.
அதனடிப்படையில் கடலூர் சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட ஐயப்பன் 10 வருடங்களாக பூட்டப்பட்டிருந்த சட்டமன்ற அலுவலகத்தை புதுப்பித்தார். இதனை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக வேளாண் மற்றும் உழவர்நலன் துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் இன்று திறந்து வைத்தார். இதனையடுத்து தனது பணிகளை தொடங்கிய எம்.எல்.ஏ. ஐயப்பன், பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்.
கடந்த பத்து வருடங்களாக அமைச்சராக இருந்த எம்.சி சம்பத் அவர்களை நேரடியாக சந்தித்து கடலூர் தொகுதி மக்கள் தங்களது கோரிக்கை மனுக்களை கொடுக்க முடியாமல் தவித்து வந்த நிலையில் திமுக பொறுப்பேற்ற பிறகு சட்ட மன்ற அலுவலகம் திறக்கப்பட்டது பொதுமக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.