“உலக மகா நடிப்புடா” என அரசின் நாடகத்தை பார்த்து மக்கள் வாயடைத்து போய் நிற்கிறார்கள் – கம்மன்பில ராஜினாமா கோரிக்கை பற்றி மனோ கணேசன்.
மக்கள் ஏற்கனவே வாழ்க்கை செலவு நெருக்கடியில் சிக்கி தவிக்கும் வேளையில், எரிபொருள் விலையை ஏற்றியமைக்கு பொறுப்பேற்று எரிபொருள் அமைச்சர் உதய கம்மன்பில ராஜினாமா செய்ய வேண்டுமென கூறுவது யார்?
ஆளுகின்ற பொதுஜன பெரமுன (SLPP) ஆளும் கட்சியின் பொது செயலாளர் சாகர காரியவசம் எம்பி. அரசின் இந்த திடீர் “நன்னடத்தையை” பார்த்து, “உலக மகா நடிப்புப்புடா” என நாடு முழுக்க மக்கள் மயங்கி வாயடைத்து நிற்கிறார்கள் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் எம்பி கூறியுள்ளார்.
இதுபற்றி மனோ எம்பி தனது சமூக உடகங்களில் கூறியுள்ள கருத்தை தேசிய ஊடகங்களுக்கு மேலும் விவரித்து கூறியுள்ளதாவது,
பிழை நடந்தால், இப்படி பொறுப்பேற்று ராஜினாமா செய்வற்கு நல்லதே. அது நாகரீக அரசியலே. ஆனால், இந்த அரசின் வரலாறு இப்படி இல்லையே.
ஆகவே திடீரென அரசு இவ்வளவு நாகரீகமாக செயல்படுவதை பார்க்கும் போது, “நீங்கள் ஒன்றும் அவ்வளவு நல்ல அரசாங்கம் கிடையாதே” என மக்கள் சந்தேகத்துடன் அங்கலாய்கிறார்கள்.
மக்கள் நெருக்கடியில் இருக்கும் வேளையில், எரிபொருள் விலையை ஏற்றியமைக்கு பொறுப்பேற்று எரிபொருள் அமைச்சர் (கம்மன்பில) ராஜினாமா செய்ய வேண்டுமென கூறுவது, ஆளும் பொதுஜன பெரமுன (SLPP) என்ற ஆளும் கட்சியின் பொது செயலாளர் சாகர காரியவசம்.
கோவிட்19 தொற்றை கட்டுப்படுத்த உரிய வேளையில் தடுப்பூசிகளை வாங்க இந்த அரசு தவறி விட்டது. மிகவும் நட்பு நாடு என்று இவர்களே கூறிக்கொள்ளும் சீன நாடுகூட தங்கள் தயாரிப்பான சீனபார்ம் தடுப்பூசியை, வங்காளதேசத்துக்கு 10 டொலர் விலையிலும், இலங்கைக்கு 15 டொலர் விலையிலும் தருகிறது.
தடுப்பூசியை தேடி மக்கள் அல்லோல் கல்லோல் படுகிறார்கள். இவை அனைத்துக்கும் பொறுப்பேற்று ராஜினாமா செய்ய இங்கே ஆளில்லை.
நடுக்கடலில் தீப்பிடித்த இரசாயன பொருள் கொண்ட கப்பலை, கொழும்பு துறைமுகத்தை நோக்கி வரச்சொல்லி, கடல் வளத்தையும், மீனவர் வாழ்வாதாரத்தையும் அழித்தவர் யார் தெரியவில்லை.
“அவரை கண்டால் கூட்டி வாருங்க” என, பாணந்துறை முதல், புத்தளம், மன்னார் வரை மேற்கு கரை முழுக்க மீனவ மக்கள் பொங்கிநின்று கேள்வி எழுப்புகிறார்கள். “இதற்கு நான்தான் பொறுப்பு” என பொறுப்பேற்று ராஜினாமா செய்ய இங்கே ஆளில்லை.
இந்நிலையில் திடீரென அரசு இவ்வளவு நாகரீகமாக செயல்படுவதை பார்க்கும் போது, எமக்கு சந்தேகம் வருகிறது. இதற்குள் உள்ள உள்குத்து என்ன என்று கேட்க தோன்றுகிறது.
தமிழ் சினிமா சிரிப்பு நடிகர்களின் “நீ ஒன்னும் அவ்வளவு நல்லவன் கிடையாதே?” என்ற பிரபல சிரிப்பு சந்தேக வசனம் ஞாபகத்தில் வருகிறது.
உண்மையில், அமைச்சரவை தீர்மானத்தின்படியே விலை தீர்மானிக்கப்படுகிறது. அமைச்சரவையில் வாழ்க்கை செலவு உப குழு இருக்கிறது. அதில்தான் விலைவாசி முடிவுகள் எடுக்கப்பட்டன.
அமைச்சரவை அமைச்சராக இருந்த எனக்கு இதுபற்றி நன்கு தெரியும். அமைச்சரவை பத்திரங்களை யார் முன் வைத்தாலும், முடிவு எடுக்கபட்டால் அதுபற்றி முழு அமைச்சரவையும் பொறுப்பு ஏற்க வேண்டும்.
இந்த வாழ்க்கை செலவு உப குழுவில் யாரெல்லாம் இருக்கின்றார்கள்?
நிதி அமைச்சர் பிரதமர் மகிந்த ராஜபக்ச, வர்த்தக அமைச்சர் பந்துல்ல குணவர்த்தன, விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே, ராஜாங்க அமைச்சர் அஜித் கப்ரால், ராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன ஆகியோர் உள்ளார்கள்.
ஜனாதிபதி செயலாளர் பீ.பி. ஜயசுந்தர இந்த குழுவின் செயலாளராக குழுவை கூட்டுகிறார். இங்கேதான் விலையேற்றங்கள் தீர்மானிக்கப்படுகின்றன. ஆகவே இந்த குழுதான் ராஜினாமா செய்ய வேண்டும்.
அல்லது அனைத்துக்கும் பொறுப்பேற்று ஜனாதிபதி கோதாபய ராஜபக்ச ராஜினாமா செய்ய வேண்டும்.
அமைச்சர் உதய கம்மன்பில, அரசில் உள்ள சிறுகட்சி அமைச்சர். இது ஏதோ வீடு தீப்பற்றியதற்கு, வீட்டில் வளர்க்கும் கூண்டுக்கிளியை பலிகடா ஆக்குவதாக தெரிகிறது. உதய எனது தனிபட்ட நண்பர்தான். அவரையிட்டு நான் கவலையடைகிறேன்.
ஆனாலும், காலமெல்லாம் தமிழ், முஸ்லிம் மக்களுக்கு எதிராக விஷம் கக்கி வந்த உதய கம்மன்பிலவின் இன்றைய கதியை நினைத்து அரசியல்ரீதியாக கவலைப்பட எமக்கு காரணம் ஏதுமில்லை.
இதற்கு முன்னால், இதேமாதிரி காலமெல்லாம் தமிழ், முஸ்லிம் மக்களுக்கு எதிராக விஷம் கக்கி வந்து, இப்போது அரசு தலைமையின் கோபத்துக்கு ஆளாகி, அதனால் வாயை மூடிக்கொண்டு இருக்கும் அமைச்சர் விமல் வீரவன்சவின் கதியே இன்று, அமைச்சர் உதய கம்மன்பிலவிற்கு ஏற்பட்டுள்ளது.
இதைதான் அரசன் அன்று கொல்வான். தெய்வம் நின்று கொல்லும் என்று சொல்வார்களோ?