பைடன்-புட்டின் ஜெனீவா சந்திப்பு மாற்றத்தை தருமா? : சண் தவராஜா
உலகின் இரு பெரும் வல்லரசுகளின் தலைவர்கள் சந்திக்கும் நிகழ்வு ஒன்று சுவிஸ் நாட்டின் ஜெனீவா நகரில் நடைபெறவுள்ளது. யூன் 16 ஆம் திகதி நடைபெறும் இந்தச் சந்திப்பில் அமெரிக்க அரசுத் தலைவரான ஜோ பைடனும், ரஸ்ய அரசுத் தலைவரான விளாடிமிர் புட்டினும் கலந்து கொள்ள உள்ளனர். இவர்கள் இருவரும் பேச்சுவார்த்தைக்காகச் சந்தித்துக் கொள்வது இதுவே முதன்முறை இல்லையென்றாலும், அமெரிக்க அரசுத் தலைவர் என்ற அடிப்படையில் ஜோ பைடன், புட்டினைச் சந்திப்பது இதுவே முதல்முறையாகும். இரண்டு நாடுகளுக்கும் இடையில் சுமுக உறவு இல்லாத இன்றைய நிலையில் நிகழும் இந்தச் சந்திப்பு காரணமாக இரு நாடுகள் சார்ந்தோ, உலக அரசியல் சார்ந்தோ சடுதியான மாற்றங்கள் எதுவும் எதிர்பார்க்கப்படாதுவிட்டாலும், இரண்டு வல்லரசு நாடுகளின் தலைவர்கள் சந்தித்துக் கொள்வதன் ஊடாக உலக அரங்கில் சிறிய மாற்றமாவது – தற்காலிகமாகவேனும் – உருவாகும் என எதிர்பார்க்கலாம்.
முன்னைய காலங்களில் நடைபெற்ற அமெரிக்க-ரஸ்யத் தலைவர்களின் உச்சி மகாநாடுகள் போன்று, 16 ஆம் திகதி நடைபெறவுள்ள சந்திப்பு உலக அரங்கில் பாரிய பரபரப்புகள் எதனையும் ஏற்படுத்தவில்லை. பன்னாட்டு ஊடகங்கள் கூட இந்தச் சந்திப்பு தொடர்பாகப் பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை. சந்திப்பு நிகழும் சுவிஸ் நாட்டு ஊடகங்கள் கூட இந்தச் சந்திப்பு தொடர்பில் பெரிதும் கண்டுகொள்ளவில்லை. எந்தவித சடுதியான மாற்றங்களையும் குறித்த சந்திப்பு ஏற்படுத்தப் போவதில்லை என்ற எதிர்பார்ப்பே ஊடகங்களின் இந்தப் பாராமுகத்துக்குக் காரணம் எனப் புரிந்து கொள்ள முடியும். அவ்வாறாயின், எதற்காக இந்தச் சந்திப்பு நிகழ்கின்றது?
இரு நாட்டுத் தலைவர்களின் சந்திப்பு என்பது தெருவில் ஒருவரை ஒருவர் சந்தித்துக் கொள்வதைப் போன்றதல்ல. அதிலும், அமெரிக்கா போன்ற உலக வல்லரசின் தலைவர் ஒரு சந்திப்பில் ஈடுபடுகின்றார் என்றால் அதற்கான தயாரிப்புகள் முன்கூட்டியே தொடங்கிவிடும். அமெரிக்கா அளவில் இல்லாவிட்டாலும் ரஸ்யாவுக்கும் இது ஓரளவு பொருந்தும். பாதுகாப்பு ஏற்பாடுகள் முதற்கொண்டு என்னென்ன விடயங்களைப் பேசுவது, பேச்சுவார்த்தைக் குழுவில் யார் யார் கலந்து கொள்வது போன்ற விடயங்கள் முன்கூட்டியே திட்டமிடப்பட்டுவிடும். அது மாத்திரமன்றி குறித்த பேச்சுக்கள் தொடர்பாக அந்தந்த நாடுகளில் உள்ள கொள்கை வகுப்பாளர்களின் கருத்துக்களும் அறியப்படும்.
அமெரிக்காவைப் பொறுத்தவரை பேச்சுக்களின் நோக்கம் தொடர்பாக பைடன் தெளிவாகக் கூறிவிட்டார். “நான் புட்டினைச் சந்திக்கப் போகிறேன். அவர் எவற்றைத் தெரிந்து கொள்ள வேண்டும் என நான் நினைக்கிறேனோ அவற்றை அவருக்குச் சொல்லப் போகிறேன்” என பைடன் கூறியுள்ளார்.
உலக வல்லரசு என்ற அடிப்படையிலும், உலகில் உள்ள அனைத்து நாடுகளையும் விட மேன்மையான நாடு அமெரிக்காவே என்ற மேலாதிக்க சிந்தனையின் அடிப்படையிலும் வெளியாகிய கருத்து இது. பொதுவாக அமெரிக்க மக்கள் அநேகரிடம் உள்ள சிந்தனைப் போக்கே இது. ‘நாம் மட்டும் உயர்ந்தவர்கள், உலகை வழிநடத்தப் பிறந்தவர்கள்’ என்ற எண்ணத்தைக் கொண்ட அவர்கள் அவ்வாறு தம்மை வெளிப்படுத்திக் கொள்வதைப் பெருமையாகவே கருதுபவர்கள். பைடனின் கருத்தை மிகச் சரியாகப் புரிந்து கொள்வதானால், நடக்கப் போவது பேச்சுவார்த்தை அல்ல. அது பைடனின் பேச்சு மட்டுமே. நான் சொல்வேன், புட்டின் கேட்பார் என்பதே அதன் விளக்கம்.
புட்டின் சாதாரணமான ஒருவர் அல்ல என்பதைப் புரிந்த பின்னரும் பைடன் இவ்வாறு கூறியிருப்பது சிலவேளைகளில் தனது நாட்டு மக்களைத் திருப்திப்படுத்துவதற்கானதாக இருக்கக்கூடும். அமெரிக்க அளவுக்கு இல்லாவிட்டாலும் கூட, அமெரிக்காவுக்குச் சவால்விடும் அளவுக்கு வல்லமை படைத்த நாடுகளுள் ஒன்றாக ரஸ்யா இருக்கிறது என்பதே யதார்த்தம். அது மாத்திரமன்றி, அமெரிக்க முகாம் என உலக அரங்கில் ஒரு முகாம் இருப்பதைப் போன்று, ரஸ்ய ஆதரவு முகாம் ஒன்று – பெரிதாக இல்லாவிட்டாலும் – இயங்கிக் கொண்டே இருக்கிறது.
உள்நாட்டில் நிலவும் பொதுமக்களின் அன்றாடப் பிரச்சினைகளின் பக்கம் இருந்து அவர்களின் கவனத்தைத் திசைதிருப்ப, இல்லாத எதிரிகளைக் கட்டமைப்பதை முதலாளித்துவ நாடுகள் வழமையாகக் கொண்டுள்ளன. நடப்பு உலகில் அமெரிக்காவின் எதிரிகள் வரிசையில் முன்னணியில் ரஸ்யா, சீனா, ஈரான், சிரியா உள்ளிட்ட நாடுகள் உள்ளன. மிகச் சரியாகச் சொல்வதானால் அவ்வாறு எதிரிகளாக உருவகப்படுத்தப்படுகின்றன.
இத்தகைய நாடுகளை முறியடிக்கும் திறன் அமெரிக்கா ஒன்றிற்கே உள்ளது, அதற்கான போராட்டத்திற்குத் தலைமை தாங்கும் வல்லமை அமெரிக்காவுக்கே உள்ளது என்பது போன்ற பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. ஆனாலும், இத்தகைய பிரசாரங்களை முன்னெடுப்போர் ரஸ்யாவும் சீனாவும் ஒரு படைத்துறைக் கூட்டுக்குள் நுழைந்துவிடுவதைத் தடுக்கும் நோக்கைக் கொண்டுள்ளனர் என்பது அமெரிக்க வல்லமை(?)யைக் கேள்விக்கு உட்படுத்துவதாக உள்ளமையைப் புறந்தள்ளிவிட முடியாது.
உண்மையில், விளாடிமிர் புட்டினை ஜோ பைடன் நேரில் சந்தித்துப் பேசுவதை அமெரிக்கக் கொள்கை வகுப்பாளர்களில் பலரும் விரும்பவில்லை. இத்தகைய சந்திப்பின் ஊடாக சர்வாதிகாரி(?)யான புட்டினுக்கு ஒரு அங்கீகாரத்தை அமெரிக்கா வழங்குகின்றது என்பது அவர்களின் குற்றச்சாட்டு. உக்ரைனின் உள்நாட்டுப் போரில் ரஸ்யாவின் நிலைப்பாடு, ரஸ்ய ஆதரவு ஆட்சி நடைபெறும் பெலாரஸ் நாட்டில் விமானம் தரையிறக்கப்பட்டு அரச அதிருப்பதியாளர் ஒருவர் கைது செய்யப்பட்டமை, மேற்குலகினால் ‘மனித உரிமைப் போராளி’ என வர்ணிக்கப்படும் ரஸ்ய எதிர்கட்சித் தலைவர்களுள் ஒருவரான அலக்சேய் நவால்னி சிறையில் அடைக்கப்பட்டுள்ளமை போன்ற அமெரிக்காவுக்குப் பிடிக்காத(?) பல குற்றச்சாட்டுகள் உள்ள போதிலும் புட்டினைச் சந்திக்க ஜோ பைடன் முன்வந்திருக்கிறார் என்றால் அதன் பின்னால் பாரிய காரணங்கள், நலன்கள் இருக்கும் என்பதைப் புரிந்துகொள்ள முடியும்.
இந்தப் பின்னணியிலேயே மேற்கு ஐரோப்பாவுக்கான ரஸ்யாவின் எரிவாயு வழங்கல் திட்டமான Nord Stream 2 திட்டத்திற்கான தனது எதிர்ப்பைக் கைவிடுவதாக ஜோ பைடன் நிர்வாகத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. அமெரிக்க எதிர்ப்பையும் மீறி இந்தத் திட்டத்துக்கு எரிபொருள் சிக்கலை எதிர்கொண்டுள்ள யேர்மனி தொடர்ச்சியாக ஆதரவு தெரிவித்து வந்தமை குறிப்பிடத்தக்கது.
நடைபெறப் போகும் பேச்சுக்கள் தொடர்பில் கருத்து வெளியிட்ட புட்டின், “ஜோ பைடன் அனுபவம்மிக்க, நடுநிலையான, அதிக கவனம்கொண்ட ஒருவர். தனது வாழ்க்கை முழுவதையும் அரசியலில் செலவிட்டவர். அவரின் இத்தகைய பண்புகள் பேச்சுவார்த்தையில் சாதகமான செல்வாக்கைச் செலுத்தும் என நினைக்கிறேன். எனினும், ரஸ்ய-அமெரிக்க உறவில் பாரிய மாற்றங்கள் எதுவும் ஏற்பட்டுவிடும் என நான் எதிர்பார்க்கவில்லை” என்று கூறியுள்ளார்.
இதேவேளை, உலக அரங்கில் நடைபெறும் சில நிகழ்வுகளும் பைடன்-புட்டின் பேச்சுவார்த்தையின் விளைவு எவ்வாறானதாக இருக்கும் என்பதைக் கோடிகாட்டி நிற்கின்றன.
இம்மாதம் 3 ஆம் திகதி, தன்னுடைய 186 பில்லியன் டொலர் பெறுமதியான தேசிய நலவாழ்வு நிதிய சேமிப்புக்களில் இருந்த 41 பில்லியன் டொலரை மாற்றி அந்தத் தொகையை ஈரோ, யுவான் ஆகிய நாணயங்களிலும் தங்கத்திலும் சேமிக்க உள்ளதான முடிவை ரஸ்யா வெளியிட்டுள்ளது.
டொலரில் நடைபெறும் வர்த்தகத்தைச் சாட்டாக வைத்து அமெரிக்கா விதிக்கும் பொருளாதாரத் தடை நடவடிக்கைகளில் இருந்து தப்புவதற்காக ரஸ்யா இந்த முடிவை எடுத்துள்ளது. இதேவேளை, ரஸ்யா மத்திய வங்கியின் தலைவியான எல்விரா நபியுல்லினா வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், புதிய டிஜிற்றல் நாணயம் ஒன்றை அறிமுகம் செய்யப் போவதாகத் தெரிவித்துள்ளார். ஏற்கனவே ரஸ்யாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான வர்த்தகம் டொலரில் அல்லாது வேறு நாணயங்கள் ஊடாகவே நடைபெற்று வருகின்றன என்பதுவும் குறிப்பிடத்தக்கது.
முன்னதாக எப்.பி.ஐ. வெளியிட்ட செய்திக் குறிப்பொன்றில் அண்மையில் அமெரிக்க இறைச்சி நிறுவனமான ஜே.பி.எஸ்.சில் நிகழ்த்தப்பட்ட சைபர் தாக்குதலில் ரஸ்ய மண்ணில் இருந்து செயற்படும் ‘ஹக்கர்’கள் சம்பந்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது. நேரடியாக ரஸ்ய அரசுக்கு இதில் தொடர்பு உள்ளதாகத் தெரிவிக்கப்படாதுவிட்டாலும் ‘எந்தவொரு சாத்தியப்பாட்டையும் தாங்கள் நிராகரிக்கப் போவதில்லை’ என அமெரிக்க தரப்பில் கூறப்பட்டுள்ளது.
அதே தினத்தில் ரஸ்யாவிடம் இருந்து கொள்வனவு செய்யப்பட்ட எஸ்-400 ரக விமான எதிர்ப்பு ஏவுகணைகளைப் பயிற்றுவிக்கவென வருகை தந்துள்ள ரஸ்ய நிபுணர்கள் அனைவரையும் வெளியேற்றும் அறிவிப்பை துருக்கி வெளியிட்டுள்ளது. அமெரிக்க அதிகாரிகளுடன் நடாத்தப்பட்ட பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்தே இந்த முடிவு எட்டப்பட்டதாக துருக்கி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, சூடான் நாட்டில் அமைக்கப்படவிருந்த ரஸ்யாவின் படைத்தளத்திற்கு வழங்கப்பட்ட அனுமதியை மீளாய்வு செய்யவிருப்பதாக சூடான் அறிவித்துள்ளது. செங்கடல் பிராந்தியத்தில் துறைமுகத்தோடு அமையவிருந்த இந்தப் படைத்தளமே ஆபிரிக்க மண்ணில் அமையவிருந்த ரஸ்யாவின் முதலாவது படைத்தளம் என்பது குறிப்பிடத்தக்கது.
திறந்த ஆகாய ஒப்பந்தம் (Open Skies Treaty) என்ற பெயரில் ரஸ்யாவும் அமெரிக்காவும் செய்து கொண்டிருந்த ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறுவதாக அமெரிக்கா ஏற்கனவே அறிவித்திருந்தது. இந்த முடிவு கடந்த வருடம் ட்ரம்ப் ஆட்சியில் எடுக்கப்பட்டிருந்தது. இந்த முடிவில் உறுதியாக இருப்பதாக பைடன் நிர்வாகம் தெரிவித்ததைத் தொடர்ந்து, அந்த ஒப்பந்தத்தில் இருந்து உத்தியோகபூர்வமாக விலகிக் கொள்வதான அறிவிப்பை ரஸ்யா கடந்தவாரம் வெளியிட்டிருந்தது. நாடுகளுக்கு இடையிலான பதட்டத்தைத் தணிக்கும் நோக்கிலான இந்த ஒப்பந்தம் ஒரு நாடு மற்ற நாட்டின் விமானப்பரப்பில் பறப்புகளை மேற்கொண்டு அந்த நாட்டின் படைநடவடிக்கைகளைக் கண்காணிப்பதற்கான அனுமதியை வழங்கியிருந்தது.
இது தவிர, திறந்த நிலம் (Open Lands Accord) என்ற ஒப்பந்தத்தில் இருந்து விலகிக் கொள்வதாகவும் ரஸ்யா அறிவித்துள்ளது. 1992 இல் செய்து கொள்ளப்பட்ட இந்த ஒப்பந்தமானது ஒரு நாட்டின் இராஜதந்திரிகள் மற்றைய நாட்டில் விசேட அனுமதி இன்றி எங்கும் சென்று வருவதற்கான வாயப்பை வழங்கியிருந்தது.
இவை தவிர, உக்ரைன் உள்ளிட்ட ரஸ்யாவின் அயல் நாடுகளில் அமெரிக்காவும், நேட்டோவும் மேற்கொண்டுவரும் படைத்துறைப் பயிற்சி நடவடிக்கைகள் உள்ளிட்ட பல விடயங்கள் இரண்டு நாடுகளுக்கும் இடையிலான உறவைக் கொதிநிலையில் வைத்திருக்கும் சூழ்நிலையிலேயே பைடன்-புட்டின் சந்திப்பு ஏற்பாடாகியுள்ளது. இந்தச் சந்திப்பின் பலனால் உலகு நன்மை பெறுமா? அன்றில், உள்ள நிலைமை இன்னமும் மோசமாகுமா என்பது அடுத்த வாரத்தில் தெரிந்துவிடும்.