அரசின் முடிவையே அறிவித்தேன்; பதவி விலகவேண்டியது சாகரவே! – கம்மன்பில பதிலடி.

“எரிபொருள் விலை அதிகரிப்பானது அரசின் முடிவாகும். அது என்னால் எடுக்கப்பட்ட தன்னிச்சையான முடிவு கிடையாது. அரசின் அறிவிப்பையே நான் அறிவித்தேன்.”
இவ்வாறு வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தார்.
வலுசக்தி அமைச்சில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“எரிபொருள் விலை அதிகரிப்பு தொடர்பில் வாழ்க்கைச்செலவு தொடர்பான அமைச்சரவை உப குழுவே தீர்மானித்தது. ஜனாதிபதி, பிரதமர், வர்த்தகத்துறை அமைச்சர், அமைச்சர் நாமல் ராஜபக்ச உள்ளிட்டவர்கள் கூட்டத்தில் பங்கேற்றிருந்தனர். எனவே, இது என்னால் தன்னிச்சையாக எடுக்கப்பட்ட முடிவு கிடையாது.
எரிபொருள் விலை உயர்வு தொடர்பான அறிவிப்பை நிதி அமைச்சே வெளியிடும். எனினும், இது தொடர்பான அறிவிப்பை நானே விரும்பி வெளியிட்டேன். பிரதமரின் பிரதிநிதியாக இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் பங்கேற்றிருந்தார். அரச தலைவர்களைப் பாதுகாக்கவே நான் இவ்வாறு செயற்பட்டேன்.
அத்துடன், ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் கூட்டம் இடம்பெறாமலேயே கட்சியின் செயலாளர் மேற்படி அறிக்கையை வெளியிட்டுள்ளார். அக்கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் என்னிடம் தெரிவித்தனர். கட்சியின் தலைவரான பிரதமர் மஹிந்த ராஜபக்ச, தவிசாளரான அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் ஆகியோருக்குக்கூட இது பற்றி தெரியாது.
குறிப்பாக ஜனாதிபதி, பிரதமர் ஆகியோரை விமர்சித்தே சாகர காரியவசம் அறிக்கை விடுத்துள்ளார். இதற்கான அதிகாரத்தை அவருக்கு வழங்கியது யார்? அரசின் தீர்மானத்தை விமர்சித்து அவர் தவறிழைத்துள்ளார்.
எரிபொருள் வில உயர்வுக்குப் பொறுப்புக்கூற வேண்டியது யார் என்பது தொடர்பில் பகிரங்க விவாதத்துக்குச் சாகர காரியவசம் வரவேண்டும். அதற்கான சவாலை நான் விடுக்கின்றேன்.
எனவே, நான் பதவி விலக வேண்டிய அவசியமில்லை. ஜனாதிபதி, பிரதமரின் தீர்மானத்தை எதிர்க்கும் அவர்களின் கட்சி செயலாளரான சாகர காரியவசமே பதவி விலக வேண்டும்” – என்றார்.